சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்துக்கு வந்து சிறப்புரை ஆற்றும் தருணங்களில் ‘வணக்கம்’ என அழகிய தமிழில் சொல்லி தனது உரையை தொடங்குவார். சமயங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். இத்தகைய சூழலில் தமிழ் திரைப்பட பாடலை அவர் பாடுவது போன்ற ஷார்ட் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக இது கவனம் பெற்று வருகிறது. அவர் இந்த பாடலை பாடவில்லை என்பதே எதார்த்தம். இருந்தாலும் அவரது குரலை ஏஐ துணையுடன் வாய்ஸ் குளோனிங் செய்து, அதனை சாத்தியம் செய்துள்ளனர் டெக் வல்லுநர்கள்.
மெலடி, கானா, பக்தி என பல பாடல்களை பிரதமர் மோடி குரலில் குளோன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் ‘பார்த்தேனே உயிரின் வழியே…’ பாடல், உயிரே படத்தில் வரும் ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ பாடல், கேளடி கண்மணி படத்தில் வரும் ‘மண்ணில் இந்த காதலன்றி’ பாடல், ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல், ‘மைமா பேருதாண்டா அஞ்சல’ கானா பாடல் என பல்வேறு பாடல்களை பிரதமர் மோடி குரலில் குளோன் செய்துள்ளனர்.
பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ வானொலி உரை தமிழில் எப்படி இருக்கும் என்பதையும் வாய்ஸ் குளோன் மூலம் ரி-கிரியேட் செய்துள்ளனர். அதை தமிழில் கேட்கும் போது இனிதாக உள்ளது. மேலும், 90-களின் வானொலி நெறியாளர்களை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. இதே போல பிரபல பின்னணி பாடகர்கள், தங்கள் திரை வாழ்வில் பாட தவறிய பாடல்களை பாடி இருந்தால், அது எப்படி இருக்கும் என்பதையும் வாய்ஸ் குளோன் செய்து பகிர்ந்துள்ளனர் கிரியேட்டர்கள். வரும் நாட்களில் பல்வேறு பிரபலங்களின் குரலை இந்த வாய்ஸ் குளோனிங் முறையில் கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாய்ஸ் குளோனில் பிரதமர் மோடியின் குரலில் ஒலிக்கும் பாடல்கள்..