ம்துரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. இதில் பள்ளி, கல்வித் துறையின் சார்பில் அமைக்கப்படும் எண்ணும், எழுத்தும் அரங்கில் குழந்தைகளை கவர விழிப்புணர்வு வாசகங்களை வரைந்துள்ள ஆசிரியர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
வாழ்வியல்

மதுரை தமுக்கத்தில் புத்தக திருவிழா தொடக்கம்: 200 அரங்குகளில் எண்ணற்ற புத்தகங்கள்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (அக். 12) புத்தகத் திருவிழா தொடங்குகிறது. அக். 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 200 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் வாசகர்களுக்கு அறிவு விருந்து படைக்க காத்திருக்கிறது.

மதுரை தமுக்கத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாக ராஜன் ஆகியோர் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கின்றனர். மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் பதிப்பக உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி பதிப்பகங்களின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. அதுபோல பொழுதுபோக்கு நிறைந்த சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளுக்கான ”சிறார் சினிமா”, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் ”கதை கதையாம் காரணமாம்” சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தினமும் மாலை 4 மணி முதல் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், மாலை 5 மணி முதல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ”சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடைபெற உள்ளன. விழாவுக்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்று ண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT