வாழ்வியல்

தசரா வேடப்பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு: 10% விலை உயர்வு @ குலசேகரன்பட்டினம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அணிவதற்கான வேடப்பொருட்கள் விற்பனை திருநெல்வேலியில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டைவிட விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

மைசூருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா பிரசித்தி பெற்றது. வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்குகிறது. தசராவை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்த பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலிக்கும் பக்தர்கள், விஜயதசமி நாளில் கோயிலுக்கு வந்து அந்த காணிக்கையை செலுத்துகிறார்கள்.

இவர்கள் வேடம் அணிவதற்காக திருநெல்வேலி கடைவீதிகளில் வேடப்பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லையப்பர் கோயில் வாசலிலுள்ள உள்ள கடைகளில் இந்த பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விற்பனையாளர் சொ.ஈஸ்வரன் கூறியதாவது: சென்னை, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட பிற இடங்களில் இருந்தும், திசையன்விளை, சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளில் இருந்தும் வேடப்பொருட்கள் தருவிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

விநாயகர், முருகன், காளி, சுடலைமாடன், அம்மன், ஆஞ்சநேயர், ராஜா, ராணி, குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு உள்ளிட்ட வேடப்பொருட்கள் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டை விட விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. காளி செட் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரையும், அம்மன் செட் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரம் வரையிலும்,

முருகன் செட் ரூ.750-ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரையிலும், குரங்கு செட் ரூ.650 முதல் ரூ.1000-ம் வரையிலும், குறத்தி செட் ரூ.1500-க்கும், ஆஞ்சநேயர் செட் ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரையிலும், சிவன் செட் ரூ.5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT