படங்கள்: ஆர்.டி.சிவசங்கர் 
வாழ்வியல்

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! - உதகையில் பழங்கால கார்களின் அணிவகுப்பு

செய்திப்பிரிவு

உதகை: மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் சார்பில், உதகையில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

முன்னதாக, மெட்ராஸ் ஹெரி டேஜ் மோட்டார் கிளப் சார்பில் சென்னையில் இருந்து 35 பழங்கால கார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த கார்கள், உதகையிலுள்ள சிம்சன் நிறுவனத்தின் மைதானத்தில் பொது மக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், உதகையிலுள்ள 10 பழங்கால கார்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

பின்னர், இந்த கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முன்னாள் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக சென்று மீண்டும் சிம்சன் நிறுவனத்தின் மைதானத்துக்கு கார்கள் வந்து சேர்ந்தன.

பழமை வாய்ந்த மோரிஸ் மைனர், வில்லிஸ், ஜாக்குவார், மெர்சிடீஸ் பென்ஸ், அம்பாசிடர், பியட், ஸ்டேண்டர்டு, செவர்லெட் பிளைமவுத், ஆஸ்டின், இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப்கள், பிரபலங்கள் வைத்திருந்த கார்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் பயன் படுத்திய கார்கள், 1930-க்கு முன் தயாரிக்கப் பட்ட பல நிறுவனங்களின் கார்கள் கண் காட்சியில் இடம் பெற்றிருந்தன.

1982-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹோண்டா மங்கி 50 சிசி மோட்டார் சைக்கிள், 1976-ம் ஆண்டு பாயும் புலி படத்தில் ரஜினி பயன்படுத்திய சுசுகி ஆர்.வி.90 பைக், வோக்ஸ்வேகன் பீட்டில் கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன. பழமையான கார்களை வைத்துள்ளவர் களில் சிலர், அதை அப்படியே தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

இதனை ஒரு பொழுது போக்காக செய்து வருகின்றனர். அமெரிக்காவில் இருந்து டாட்ஜ் பிரதர்ஸ் வேன் கொண்டுவரப்பட்டுள்ளது. 1930-களில் அங்கு கேரவன் வாகனங்களாக இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

இது தொடர்பாக மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் செயலாளர் எம்.எஸ்.குகன் கூறும்போது, "கிராண்ட் ஹெரிடேஜ் கார் டிரைவ் 2023 மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப், சென்னையில் உள்ள முதன்மையான வின்டேஜ், கிளாசிக் கார் மற்றும் பைக் கிளப் என்பது, கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு.

பழங்கால, கிளாசிக் வாகனங்களைப் பாதுகாத்தல், மறுசீரமைத்தல், காட்சிப் படுத்துதல் ஆகியவற்றில் எங்கள் கவனம் உள்ளது. கடந்த 5-ம் தேதி தொடங்கிய இந்த அணிவகுப்பு வரும் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. பெங்களூருவை சேர்ந்த கர்நாடக விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப்-பின் உறுப்பினர்களால் இயக்கப்படும் 10 கார்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் திறந்திருக்கும். அக்டோபர் 9-ம் தேதி வாகனங்கள் புறப்பட்டு சென்னை மற்றும் பெங்களூருவுக்கு திரும்பும்" என்றார்.

SCROLL FOR NEXT