மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கையில் கேமராவுடன் 12 வயது சிறுமி ஷிவானியை கட்டாயம் பார்க்க முடியும். ஓடியாடி படம்பிடிக்கும் அந்தச் சிறுமியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
மதுரை பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்புப் படித்து வரும் ஷிவானிதான் அவர். உயர் நீதிமன்றக் கிளை புகைப்பட நிபுணர் தனராஜின் மகள். தந்தையுடன் இன்னொரு கேமராவுடன் நிகழ்வுகளுக்குச் செல்லும் ஷிவானி, தன் கேமராவில் விளையாட்டாகப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். அந்தப் புகைப்படங்கள் தத்ரூமாக இருக்கவே, அவரை தனராஜ் ஊக்கப்படுத்தினார். தான் செல்லும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உடன் அழைத்துச் சென்று பழக்கப்படுத்தினார். அதன் விளைவாக தற்போது ஒரு நிகழ்வை தன்னந்தனியாக புகைப்படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் ஷிவானி.
உயர் நீதிமன்றக் கிளை நிகழ்வுகளில் கழுத்தில் கேமராவுடன் அங்கும் இங்கும் ஓடியபடி புகைப்படம் எடுக்கும் ஷிவானியை பாராட்டாத நீதிபதிகளே இல்லை. நிகழ்வுகளில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இயல்பாக இருக்கும்போது ஷிவானி எடுக்கும் புகைப்படங்களைப் பார்த்து நீதிபதிகளே வியந்துள்ளனர். நீதிபதி அனிதா சுமந்த் பாராட்டுக் கடிதமே அனுப்பியுள்ளார். அதில் ‘ஷிவானி சிறப்பாகப் புகைப்படம் எடுக்கிறார். அதை விட்டுவிடாமல், தொடர வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேடைக்கு அழைத்தும் பாராட்டினார்.
இது குறித்து ஷிவானி கூறுகையில், நான் எங்கள் குடும்பத்தில் 3-ம் தலைமுறை புகைப்படக் கலைஞர். 3 வயதிலிருந்து புகைப்படம் எடுத்து வருகிறேன். தந்தை என்னை ஊக்கப்படுத்தினார். நீதிபதிகள், வழக்கறிஞர்களின் பாராட்டுகள் எனக்கு மேலும் மேலும் உற்சாகத்தைக் கொடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து முன்னடுத்துச் செல்வேன், என்றார்.
தனராஜ் கூறுகையில், உசிலம்பட்டி நக்கலப்பட்டிதான் எங்கள் சொந்த ஊர். உசிலம்பட்டியிலும், மதுரையிலும் பல ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறோம். தொடக்கத்தில் ஷிவானி கேமராவை வைத்துக்கொண்டு விளையாட்டாக படம் பிடிப்பார். அவர் எடுக்கும் படங்களைப் பார்க்கும்போது இயல்பாக, அழகாக இருக்கும். நீதிபதிகள், வழக்கறிஞர்களின் தனி புகைப்படங்கள் ஷிவானிக்கு பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்தது. உயர் நீதிமன்ற கிளையில் நடைபெறும் குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களிலும் அவர் எடுத்த புகைப்படங்கள் பலரின் பாராட்டுகளைப் பெற்றது, என்றார்.