திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மாருதி 800 காரினை மினி ரோல்ஸ் ராய்ஸ் உருவில் மாற்றி உள்ளார் ஹதீஃப் என்ற இளைஞர். இது குறித்த தகவல் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காரை உருமாற்றியதற்கான காரணத்தை அவர் விளக்கி உள்ளார்.
“எனக்கு சிறுவயதில் இருந்தே கார்கள் என்றால் அலாதி பிரியம். கரோனா காலகட்டத்தில் வாகன மாடிஃபிகேஷன் குறித்து அறிந்து கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் பைக் என்ஜினை கொண்டு சிறிய ரக ஜீப் ஒன்றை உருவாக்கி இருந்தேன். தொடர்ந்து மாருதி 800 காரை ரோல்ஸ் ராய்ஸ் காராக மாற்றலாம் என யோசித்தேன். அதன்படி இதை செய்துள்ளேன்.
சுமார் 3 மாத காலம் இதற்கு எடுத்தது. இன்னும் பணி முழுமை பெறவில்லை. கிடைக்கும் நிதியை கொண்டு, ஓய்வு நேரத்தில் கொஞ்சம் நிதானமாக இந்தப் பணியை செய்து கொண்டு இருக்கிறேன். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எனக்கு உறுதுணையாக உள்ளனர். இதுவரை இந்த மாற்றத்துக்கு ரூ.45,000 செலவு செய்துள்ளேன். எதிர்காலத்தில் கார் மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புகிறேன்” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். காரின் முன்பக்கம், பின்பக்கம், உட்புரம் போன்றவற்றை ஹதீஃப் மாதிரி உள்ளார்.
1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். இந்த நிறுவனத்தின் கார்கள் கார் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.