வாழ்வியல்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும் உளவியல் மாற்றங்களும் - ஒரு பார்வை #TNEmpowersWomen

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ மூலம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இது முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டம் உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிவிப்பின் மூலம் செயல் வடிவமாக உயிர் கொடுத்தார். முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாள் அன்று இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு சார்பில் இந்தத் திட்டத்துக்கான தகுதி குறித்த விவரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் அறிஞர்கள் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தை உரத்த குரலில் பேசியவர்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் மகளிர் முன்னேற்றம் சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தங்கள் ஆட்சி காலங்களில் செயல்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் இணைந்துள்ளார்.

நிச்சயம் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை உறுதி செய்யும் இந்தத் திட்டம் மகிழ்ச்சியை மலர செய்யும் என முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் 1,000 ரூபாய் மகளிரின் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் குடும்பத் தேவைக்கு உதவும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் கேஸ் சிலிண்டர் வாங்க ஆகும் செலவை சமாளிக்கலாம். இதுபோல ஒவ்வொரு பயனாளிகளுக்கும் அவர்களது தேவைக்கு ஏற்ப இந்த உரிமைத் தொகை உதவும் என குடும்பத் தலைவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மொபைல் போனில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்க்கும்போது மன நிறைவாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அய்யாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேனியை சேர்ந்த பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் இந்த 1,000 ரூபாய் பெரிதும் உதவும் என்பது பயனாளிகளின் கருத்தாக உள்ளது.

அரசே சொல்லியிருப்பதுபோல இது ‘மகளிர் உரிமைத் தொகை’. வீடு, சமூகம், மாநிலம், நாடு என ஒவ்வொரு அலகும் பிசிறின்றி இயங்குவதற்கு உயவுப் பொருளாகப் பெரும் பங்காற்றி வரும் பெண்களின் இருப்புக்கு இதைவிடப் பன்மடங்கு நிதியை அரசு அளிக்க வேண்டும் என்கிறபோதும், இதை ஓர் அங்கீகாரமாகக் கருதலாம்.

பொருளீட்டுகிற வேலைகளில் ஆண்கள் ஈடுபடுவதால் ஆண்களின் உழைப்பு மேன்மையானது, வருமானமில்லை என்பதாலேயே பெண்களின் உழைப்பு மலிவானது என்கிற பிற்போக்குச் சிந்தனைதான் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைக்கூடச் சலுகையாகப் பாவிக்கத் தூண்டுகிறது. சமையல், வீட்டுப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, முதியோர் நலன், வீட்டு நிர்வாகம் எனக் குடும்பத்துக்குள் பெண்கள் செய்கிற அடுக்கடுக்கான வேலைகளுக்கு நாம் என்ன ஊதியம் தருகிறோம்?

இவற்றோடு பிள்ளைப்பேறு, அது தொடர்பான உடல் - மன நலச் சிக்கல்களுக்கும் பெண்கள் ஆளாகிறார்கள். இவ்வளவுக்கும் நடுவில் வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு வீடு - வேலை என இரட்டைச் சுமையாகிவிடுகிறது. இப்படி முதுகொடிய வேலை செய்யும் பெண்களின் வருமானமில்லாத உழைப்பைக் கணக்கில்கொள்ளும் வகையில் உளவியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகிறது ‘மகளிர் உரிமைத் தொகை’.

பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் தேவை எனப் பெண்ணியவாதிகள் காலம்காலமாக வலியுறுத்திவரும் கோரிக்கையின் சிறு முன்னகர்வாகவும் இந்தத் திட்டத்தை அணுகலாம்.

ஆயிரம் ரூபாயில் பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்து விடுவார்களா என்றால்... தங்கள் கைகளை நேரடியாக வந்து சேரும் இந்தப் பணம் பெண்களுக்கு நிச்சயம் உளவியல் ரீதியில் தன்னம்பிக்கையைத் தரும். தங்கள் சிறு செலவுக்காக யார் கையை யும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிராத நிமிர்வைத் தரும்.

பெண்களுக்கென்று தமிழக அரசு செயல்படுத்திவரும் ‘கட்டண மில்லாப் பேருந்து’ திட்டம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது எதையும் அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே பார்க்கும் பலர் நக்கலும் நையாண்டியுமாகக் கருத்துச் சொன்னார்கள். பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல பத்து ரூபாய்கூட இல்லாத பெண்களுக்குத்தான் தெரியும் ‘கட்டணமில்லாப் பேருந்து’ திட்டத்தின் அவசியமும் தேவையும். இன்று லட்சக்கணக்கான பெண்கள் அந்தத் திட்டத்தில் பயன்பெற்றுவருவதைவிட அவர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் தாங்கள் நினைத்த நேரத்தில் பயணப்படுவது சிறு விடுதலைதானே.

‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் பெண்களுக்கான சிறப்புத் திட்டம் என்பதால் அதைச் செயல்படுத்துவதில் அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும். தகுதியை வரையறை செய்வதிலும் தகுதிவாய்ந்தவர்களை அடையாளம் காண்பதிலும் வெளிப்படைத்தன்மையும் பரவலாக்கமும் வேண்டும். பணம் பயனாளியைச் சென்றடைகிற வழியில் எந்தவொரு இடத்திலும் ஊழலுக்கு இடமில்லாத வகையில் இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இந்த ‘வேண்டும்’கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இப்போது பிறந்துள்ளது.

#TNEmpowersWomen

SCROLL FOR NEXT