விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காத்தவராயன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வரலாற்று எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. வெம்பக் கோட்டை அகழாய்வு பகுதியில் மட்டுமின்றி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியான அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி களிலும் தொல்லியல் பொருட்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன.
தற்போது மாவட்டத்தில் முதன்முறையாக 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காத்தவராயன் சிலை ஒன்று அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரணி கிராமத்தில் காட்டுப் பகுதியில் மிகவும் பழமையான சிலை ஒன்று உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வ கணேஷ், கல்லூரி மாணவர் ஜோஸ்வா ஆகியோர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் செல்லப் பாண்டியன், தாமரைக் கண்ணன், அருப்புக்கோட்டை ஸ்ரீதர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, இம்மூவரும் கல்லூரணியில் உள்ள சிலையை ஆய்வு செய்தபோது, அது காத்தவராயன் சிலை என்பதும், மாவட்டத்தில் முதன்முறையாக இச்சிலை கிடைத்துள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் செல்லப் பாண்டியன், தாமரைக் கண்ணன், அருப்புக்கோட்டை ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது: இது புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் காத்தவராயனின் சிலையாகும். இவருக்கு காத்த வீரிய அர்ஜுனா, சஹஸ்ரபாஹு அர்ஜுனா,சஹஸ்ரார்ஜூனா உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் உள்ளன.
இவர் மஹிஷ்மதி நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி என்ற நகரை, தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர். இவர் மிகப்பெரிய வீரர். இவர் தத்தாத்ரேயரின் சிறந்த பக்தர். புராணங்களின்படி இவர் சுதர்சன சக்கரத்தின் அவதாரமாக கருதப்படுகிறார்.புராணங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட அரசன் காத்த வீரிய அர்ஜுனன்.
இவரது பெயர் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. இவர் ராவணனின் சம காலத்தைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார். தற்போது கண்டறியப் பட்டுள்ள சிலையில் தலை இல்லை. சிலையின் உயரம் 5 அடி, அகலம் 2 அடியாக உள்ளது. வலது கை முழுவதுமாக சிதைந்து விட்டது. இடது கையை ஹடி ஹஸ்தமாக வைத்துள்ளார். ஹடி என்பது இடுப்பைக் குறிக்கும். கழுத்தில் நிறைய ஆபரணங்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக காரைப்பூ என்ற ஆபரணத்தை அணிந்துள்ளார். இந்தக் காரைப்பூ ஆபரணத்தை அணிபவர் காத்த வீரிய அர்ஜுனன் மட்டுமே. இது போன்ற சிலைகளை பார்க்கும் போது முற்காலப் பாண்டியர்கள் ஆன்மிகத்திலும், கோயில் கட்டிடக் கலையிலும், சிற்பக் கலையிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த சிலையின் காலம் 9-ம் நூற்றாண்டாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.