உடுமலை: கூடைப்பந்து விளையாட்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, தனது ஓய்வு நேரத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை 20 ஆண்டுகளாக செய்து வருகிறார் தீயணைப்பு துறையில் நிலைய அலுவலராக பணியாற்றி வரும் வே.பிரபாகரன் (48).
தாராபுரத்தை பூர்வீகமாக கொண்ட இவர், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியும், இளங்கலை பட்டப்படிப்பும் முடித்துள்ளார். இவரது பள்ளிக் காலத்தில் கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார். மாநில, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடி சாதித்துள்ளார். 1996-ம் ஆண்டு முதல் தீயணைப்பு துறையில் பணி வாய்ப்பு கிடைத்ததன் மூலமாக, அத்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கூடைப்பந்து பயிற்சி அளித்து வருவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். இதன்மூலமாக, கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளதாக கூறுகிறார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனது சொந்த ஊர் தாராபுரம். வெள்ளகோவிலில் தீயணைப்பு அலுவலராக உள்ளேன். கோவை மாவட்ட அளவிலான 17 வயது, 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணி வாய்ப்பு கிடைத்தது.
2020-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தீயணைப்பு துறையின் கூடைப்பந்து அணியில், கோவை மேற்கு மண்டல அணிக்கு தலைவராகவும், பயிற்சியாளராகவும் இருந்தேன். பின் காலில் ஏற்பட்ட காயத்தால் அந்த பொறுப்பில் இருந்து விலகினேன்.
எனினும், கற்றுக்கொண்ட விளையாட்டை அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 2005-ம் ஆண்டு முதல் கிராமப்புற மாணவிகளுக்கு இலவச பயிற்சியை அளித்து வருகிறேன். இதன்மூலமாக மாவட்ட, மாநில அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இந்த விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அவசியம். ஒரு மணி நேரம் நிற்காமல் ஓடும் திறன் இருப்பதுடன், உயரமாக குதிக்கும் திறன் உள்ளவர்களும் சாதிக்கும் வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களில் இருந்து சைக்கிள் ஓட்டி வரும் மாணவிகளுக்கு கால்களில் பலம் அதிகம் உண்டு. அதனால், கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளுக்கு மட்டுமே பயிற்சி அளித்து வருகிறேன். கூடைப்பந்து விளையாட்டில் சாதிக்க நினைப்போருக்கு தேவையான ஆலோசனை அளிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.