வாழ்வியல்

மேட்டுப்பாளையம் ரயில்பாதைக்கு 151 வயது!

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மலைப்பாதைக்கு வித்திட்ட மேட்டுப்பாளையம் ரயில் பாதை அமைக்கப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இது குறித்து நீலகிரி ஆவணக் காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறியதாவது: 1855-ம் ஆண்டு கவர்னர் ஜெனரல் லார்ட் டல்ஹவுசியால், இந்திய ரயில்வே அமைப்பு முதலில் திட்டமிடப்பட்டது. வட இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகக் கட்டுப்பாட்டின் ஒரு கருவியாகவும், உலக சந்தைகளுடன் சாத்தியமான இணைப்பாகவும் ரயில்வேயை மாற்ற அவர் திட்டமிட்டார்.

அவருக்கு தெற்கே ரயில் போக்குவரத்தை தொடங்குவதில் எந்த திட்டமும் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் தங்கிய பிறகு,மெட்ராஸ் பிரசி டென்சிக்கு அரசியல் எல்லைகள் இல்லையென்றாலும், தெற்கே ரயில் இணைப்பை விரிவுபடுத்துவது, தேவையின் போது சென்னையிலிருந்து மும்பைக்கு படைகளை அனுப்ப பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.எனவே அவர் 2 பாதைகளை பரிந்துரைத்தார்.

ஒன்று சென்னையிலிருந்து வாலாஜா சாலை (ஆற்காடு) வேலூர், சேலம் மற்றும் மேற்கு கடற்கரை வழியாக ஒரு கிளை பெங்களூருக்கும், மற்றொன்று நீலகிரி அடிவாரத்துக்கும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1856-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி மெட்ராஸ் ரயில்வேயின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு, சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான தென் மேற்குப் பாதை 1864-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியும், மேட்டுப்பாளையம் வரையிலான நீட்டிப்பு 1873-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியும் திறக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் என்பது பெருங்கற்கால இடங்களை கொண்ட பழமையான நாகரிக இடமாகும். அதன் பெயர் ஒரு மலையோர ராணுவ புறக்காவல் நிலையத்தை குறிக்கிறது.ரயில் பாதையின் விரிவாக்கம் மேட்டுப்பாளையத்தின் நவீன நகரத்துக்கு வழிவகுத்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் 1887-ம் ஆண்டின் கையேட்டின்படி, இந்த நிலையம் துணை தாசில்தார் மற்றும் இரண்டாம் வகுப்பு மாஜிஸ் திரேட்டின் கீழ் ஒரு மருந்தகம், பங்களா, ஹோட்டல் மற்றும் மலைகளுக்கு பயணிகள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான முகவர்களின் தபால் நிலையங்களுடன் இருந்தது.

1900-ல் அதன் மக்கள் தொகை வெறும் 800 மட்டுமே. புதிய ரயில் பாதை அமையும் வரை நீலகிரிக்கு பெங்களூருவில் இருந்து வரும் போக்குவரத்து மட்டுமே ஒரே போக்குவரத்து முறையாக இருந்தது.பின்னர் குன்னூர் மலைப்பாதைஅமைக்கப்பட்டதும் தொடக்கத்தில் காளைகள் மற்றும் குதிரைகள் மூலம் மலைக்கு செல்லும் பிரதான பாதையாக மாறியது.

பின்னர் ஒரு லாபகரமான டாங்கோ ( குதிரைவண்டி ) சேவை மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே போக்குவரத்து வர்த்தகத்தை ஏக போக மாக்கியது. 20-ம் நூற்றாண்டில் மேட்டுப்பாளையம் தோட்டப் பயிர்கள் மற்றும் கார்டைட் பொருட்களுக்கான முக்கிய போக்குவரத்து வழிமுறையாகவும், மலைக் காய்கறிகளுக்கான செழிப்பான சந்தை நகரமாகவும் உருவெடுத்தது, என்றார்.

SCROLL FOR NEXT