மதுரை: இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், அமெரிக்காவில் பார்த்த வேலையை விட்டு விட்டு மதுரைக்கு திரும்பிய பெண், விவசாயிகளை ஒன்றிணைத்து குழுவாகச் செயல்பட்டு இலவசமாக விதைகளை வழங்கி வருகிறார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தின் மீதான ஈர்ப்பால், அமெரிக்காவில் பார்த்த வேலையை விட்டுவிட்டு வீரராஜ் - சண்முகவடிவு தம்பதி தமிழகம் திரும்பினர். மதுரை கூடல்நகருக்கு குடி பெயர்ந்த போதிலும், சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார் சண்முக வடிவு.
தற்போது தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயிகளை ஒன்றிணைத்து வேம்பு இயற்கை விவசாயிகள் குழாம் என குழுவைத் தொடங்கியுள்ளார். மேலும், இயற்கை விவசாயத்தை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கி வருகிறார். மேலும் விளை பொருட்களை அவர்களிடமே கொள்முதல் செய்து குறைந்த விலையில் ஆன்லைன் மூலம் விற்பனையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து இயற்கை விவசாயி சண்முகவடிவு கூறியதாவது: நான், எனது கணவர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியிருந்தோம். எனது கணவர் வீரராஜ் பேங்க் ஆப் அமெரிக்காவில் துணைத்தலைவராக பணியாற்றினார். நான் தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்தேன்.
எனது கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அங்கேயே வீட்டுத் தோட்டத்தில் இயற்கை விவசாயத்தில் காய்கறிகள் விளை வித்தோம். அதனை சாப்பிட்ட பின்பு உடல் நலம் சரியானது. அதன்பின்னர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பரப்புரைகளை கேட்டு வந்தோம். பின்னர் மதுரை திரும்பினோம்.
அதன் பின்னர், பூர்வீக ஊரான அருப்புக்கோட்டை அருகே புலியூரானில் 5 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டோம். அங்கு பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்தோம். அவற்றை விற்பனை செய்ய முடியாமல் கோழிகளுக்கு தீவனமாக அளித்தோம். பின்னர் எனது கணவர் வேம்பு இயற்கை விவசாயிகள் குழாம் என்ற குழுவை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளை ஒன்றிணைத்தார்.
பின்னர் விவசாயிகளுக்கு இலவசமாக பாரம்பரிய நெல் ரக விதைகளை வழங்க தொடங்கினோம். பின்னர் அவர்கள் விளைவித்த நெல் ரகங்களை நல்ல விலை கொடுத்து வாங்கி னோம். அதேபோல் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் ஆகிய வற்றை வழங்கினோம். தற்போது எங்களது குழுவில் 200 இயற்கை விவசாயிகள் உள்ளனர். மற்ற இடங்களைவிட குறைந்த விலை யில் விளைபொருட்களை விற் கிறோம்.
உதாரணத்துக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி கிலோ ரூ.130-க்கு விற்றால் நாங்கள் ரூ.110-க்கு விற்கிறோம். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் விற் பனை செய்து வருகிறோம். மொத்தமாக 6 கிலோவுக்கு மேல் வாங்கினால் வீடுகளுக்கு இலவச டோர் டெலிவரி செய்கிறோம். எங்களிடம் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருங்குருவை, கிச்சிலி சம்பா, தூயமல்லி, பூங்கார், குள்ளகார், நாட்டுப் பொன்னி உட்பட பாரம்பரிய அரிசி வகைகள், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனி வரகு,
வெள்ளை - சிகப்பு சோளம் போன்ற சிறு தானியங்கள், உளுந்து, பாசிப் பயறு, பாசிப் பருப்பு, செம்மண் கட்டி உடைத்த துவரை, நிலக் கடலை, மிளகு, குண்டு மிளகாய் வற்றல், சம்பா மிளகு வற்றல், சீரகம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, இந்துப்பு, கொம்புத் தேன், மலைத் தேன், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் நாட்டு மாட்டு நெய், மரச்செக்கு எண்ணெய் வகைகள் விற்பனை செய்து வருகிறோம். குழுவாக இணைந்து செயல்படுவதால் உற்பத்தி செய்வதை எளிதில் விற்பனை செய்து லாபம் ஈட்ட முடிகிறது, இவ்வாறு அவர் கூறினார்.