மதுரை: கொட்டாம்பட்டியில் விவசாயிகளுக்காக விவசாயிகளே இணைந்து நடத்தும் ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் கலப்படமில்லாத தரமான எண்ணெய் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில்
1,000 விவசாயிகள் ஒன்றிணைந்து ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து தேங்காய், கொப்பரை, கடலை, எள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, எண்ணெய் உற்பத்தி செய்து விற்கின்றனர்.
இதுகுறித்து ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ஆர்.நல்லபாகன், துணைத் தலைவர் எம்.அன்பழகன் ஆகியோர் கூறியதாவது: விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த தானம் அறக்கட்டளையின் வயலகம் அமைப்பின் வழிகாட்டுதலோடு கொட்டாம்பட்டியில் ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை 2016-ல் தொடங்கினோம்.
இந்நிறுவனத்துக்கு 1,000 விவசாயிகள் பங்களிப்புத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கினர். மத்திய அரசின் சிறுகுறு விவசாயிகள் வளர்ச்சி ஆணையம் ரூ.10 லட்சம் பங்களிப்பு செய்தது.
நாங்கள் கொள்முதல் செய்யும் தேங்காய்களை குஜராத், டெல்லி, ஹரியாணா மாநிலங்களுக்கு அனுப்புகிறோம். கொப்பரைத் தேங்காய் பருப்பு கெடாமல் இருக்க ‘சல்பர்’ பயன்படுத்துவர். ஆனால் நாங்கள் சல்பர் பயன்படுத்தாமல் தரமான எண்ணெய் உற்பத்தி செய்கிறோம்.
கடலை எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.210, தேங்காய் எண்ணெய் ரூ.200, நல்லெண்ணெய் ரூ.340-க்கு விற்பனை செய்கிறோம். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக் கிறோம். தற்போது ரூ.45 லட்சம் வரை முதலீடாக வைத்துள்ளோம். விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.