திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே பாரம்பரிய விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மணமகளை மாட்டுவண்டியில் ஏற்றி மணமகன் அழைத்து வந்த சம்பவம் ஊர் மக்களைக் கவர்ந்தது.
திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியைச் சேர்ந்த பெருமாள் - தமிழ்செல்வி தம்பதியினர் மகன் மோகன்ராஜ். டிப்ளமோ படித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் செந்தாமரைவிளையைச் சேர்ந்த மாசானமுத்து - எஸ்தர் ஜான்சி தம்பதியினர் மகள் பொறியியல் பட்டதாரியான கலையரசிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் காலை திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு மோகன்ராஜ் - கலையரசி தம்பதியர் செந்தாமரைவிளையில் உள்ள மணமகள் இல்லத்துக்கு விருந்துக்குச் சென்றனர். பின்னர், மாலையில் மணமகள் இல்லத்தில் இருந்து மணமகள் கலையரசியை மணமகன் மோகன்ராஜ் மாட்டுவண்டியில் ஏற்றி தனது ஊரான காயாமொழிக்கு அழைத்து வந்தார். செண்டை மேளம் முழங்க சுமார் 5 கி.மீ. தூரம் மணமகளை மாட்டு வண்டியில் அழைத்து வந்ததை கண்ட கிராம மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து மோகன்ராஜ் கூறும்போது, “விவசாயத் தொழிலில் மாடுகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும், பாரம்பரிய விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கால்நடைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எனது மனைவியை மாட்டு வண்டியில் அழைத்து வந்தேன்” என்றார் அவர்.