ஒடிசாவின் தாபாடி கிராமத்தில் வயலில் வேலை செய்யும் கிருஷ்ண சந்திர அடாகா. 
வாழ்வியல்

ஒடிசா | வயல், செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றிய பழங்குடி இளைஞர் நீட் தேர்வில் வென்று மருத்துவர் ஆகிறார்

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: வயல், செங்கல் சூளை, தீப்பெட்டி ஆலையில் 15 ஆண்டுகள் தொழிலாளியாக பணியாற்றிய ஒடிசா பழங்குடி இளைஞர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேருகிறார்.

ஒடிசாவின் ராயகடா மாவட்டம், தாபாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சந்திர அடாகா (33). கொண்டா பழங்குடியினத்தை சேர்ந்த அவரது குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. தாயும் தந்தையும் விவசாயம் செய்து 5 பிள்ளைகளை வளர்த்தனர். மூத்த மகனான கிருஷ்ண சந்திர அடாகாவை, அவரது பெற்றோர் 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். அதற்குமேல் படிக்க வைக்க பண வசதி இல்லை. அப்போது ஒரு தனியார் தொண்டு நிறுவனம் கிருஷ்ண சந்திர அடாகாவின் கல்விச் செலவை ஏற்றது. இதன்மூலம் அவர் பிளஸ் 2 வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு ஒரு கல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் அவரால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை.

வயல், செங்கல் சூளை, தீப்பெட்டி ஆலையில் 15 ஆண்டுகள் அவர் தொழிலாளியாக பணியாற்றினார். எனினும் அவருக்குள் கல்வி வேட்கை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டில் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றார். கல்வி கட்டணத்துக்கு பணம் திரட்ட முடியாததால் அந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் அவரால் சேர முடியவில்லை.

நடப்பாண்டு அவர் மீண்டும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இந்த முறை அவர், வட்டிக் கடைக்காரர் ஒருவரை அணுகி கடன் கேட்டார். அந்த வட்டி கடைக்காரர் கல்வி கட்டணத்துக்காக ரூ.37,950-ஐ கடனாக வழங்கினார். அதோடு கடனுக்கு வட்டி கட்ட தேவையில்லை என்று பெருந்தன்மையுடன் கூறினார். இதைத் தொடர்ந்து களஹாண்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கிருஷ்ண சந்திர அடாகா அடுத்த வாரம் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்பில் சேர உள்ளார்.

இதுகுறித்து அடாகா கூறியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. ஆனால் கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் உள்ளூரில் விவசாய தொழிலாளியாக வேலை செய்தேன். அப்போது தினமும் ரூ.100 மட்டுமே கூலி கிடைத்தது. கடந்த 2012-ம் ஆண்டில் கேரளாவுக்கு சென்று அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்தேன். அங்கு போதிய கூலி கிடைக்காதால் கேரளாவின் பெரும்பாவூரில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கும் முறையான ஊதியம் கிடைக்கவில்லை. கடந்த 2014-ல் ஒடிசாவில் உள்ள சொந்த கிராமத்துக்கு திரும்பி விவசாய தொழிலாளியாக பணியாற்றினேன்.

கடந்த 2018-ல் மிருதுளா என்பவருடன் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் போதிய வருமானம் இல்லாததால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். அதன் பிறகு பெற்றோர் எதிர்ப்பை மீறி மிருதுளா என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். எனது பள்ளி ஆசிரியர் மற்றும் நலம் விரும்பிகளின் ஊக்கத்தால் வறுமையான சூழ்நிலையிலும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன்.

இவ்வாறு அடாகா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT