கோப்புப்படம் 
வாழ்வியல்

அரசு நடவடிக்கை எடுக்காததால் வங்கியில் ரூ.2.7 லட்சம் கடன் வாங்கி சாலை பள்ளங்களை மூட பெங்களூரு இளைஞர் முடிவு

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூரு கிழக்குப் பகுதியை சேர்ந்த குடிமக்கள் குழு என்ற அமைப்பு, 'வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாத அரசுக்கு வரி செலுத்த வேண்டாம்' (NoDevelopmentNoTax) என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் ஹலநாயக்கனஹள்ளி, முனீஷ்வரா லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் சாலை பள்ளங்களை சீரமைப்பது, குப்பையை அள்ளுவது போன்ற பணிகளை தாங்களாகவே மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பைச் சேர்ந்த ஆரிஃப் மவுத்கில் (32) ஹொசா சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க ரூ.2.7 லட்சம் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எங்கள் வட்டாரத்தில் இருக்கும்சாலை பள்ளங்களை சீரமைக்கக்கோரி அரசு மற்றும் மாநகராட்சிக்கு பல முறை மனு அளித்துவிட்டோம். எம்.பி., எம்.எல்.ஏ., கவுன்சிலர் ஆகிய மக்கள் பிரதிநிதிகளிடமும் முறையிட்டு விட்டோம். இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம் இந்த சாலையில் பயணித்த ஒரு பெண் சாலை பள்ளத்தில் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு டெலிவரி முகவர் ஒருவர் சாலை பள்ளத்தில் விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது ஊதியத்தை நம்பியே அவரது குடும்பத்தில் 9 பேர் இருக்கின்றனர்.

இந்த இரு விபத்துகளை நேரில் பார்த்துவிட்டு மிகவும் வருந்தினேன். எங்களது குழு உறுப்பினர்களிடம் நிதி வசூலித்து சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க முடிவெடுத்தேன். இதுவரை வசூலான பணத்தில் அதனை சீரமைக்க முடியாது. எனவே வங்கியில் ரூ.2.7 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். இந்த பணத்தில் சாலை பள்ளங்களை மூடுவது, குப்பை அள்ளுவது, கழிவு நீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆரிஃப் மவுத்கிலின் முயற்சிக்கு அந்தப் பகுதியிலும், சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT