படம்: ட்விட்டர் 
வாழ்வியல்

இந்தியாவின் வயதான யானை ‘பிஜுலி பிரசாத்’ 89 வயதில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சோனித்பூர்: அசாம் மாநிலத்தில் வாழ்ந்து வந்த இந்தியாவின் வயதான யானை என அறியப்படும் பிஜுலி பிரசாத் உயிரிழந்துள்ளது. அந்த யானைக்கு வயது 89 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது மூப்பு காரணமாக யானை உயிரிழந்துள்ளதாக தகவல். அசாம் மாநிலத்தின் தி வில்லியம்சன் மாகோர் குழுமத்தின் பெஹாலி தேயிலை தோட்டத்தில் தனது இறுதி மூச்சை சுவாசித்துள்ளது அந்த யானை. இன்று (ஆக. 21) அதிகாலை 3.30 மணி அளவில் அது உயிரிழந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆலிவர் சாகிப் என்பவர் தான் அதற்கு பிரசாத் என பெயர் சூட்டியுள்ளார். இந்த யானைக்கு உள்ளூர் மக்கள், தேயிலை தோட்ட ஊழியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

தேயிலை தோட்டத்துக்காக இந்த யானை குட்டியாக இருந்தபோது தி வில்லியம்சன் மாகோர் குழுமத்தின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. முதலில் பார்கேங் பகுதி தோட்டத்தில் வளர்ந்துள்ளது. அந்த தோட்டம் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் பிஹாலி பகுதியில் உள்ள தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வளர்ப்பு யானையாக வளர்க்கப்பட்டுள்ளது.

“நான் அறிந்தவரையில் நீண்ட ஆயுளுடன் இந்தியாவில் உயிர்வாழ்ந்த வளர்ப்பு யானை பிஜுலி பிரசாத் தான். காட்டில் வாழும் ஆசிய வகை யானைகள் 62 முதல் 65 வயது வரை உயிர் வாழும். முறையான பராமரிப்பு இருந்தால் வளர்ப்பு யானைகள் 80 வயது வரை வாழும்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் பிஜுலி பிரசாத்தின் பற்கள் விழுந்து விட்டன. அதனால் உணவு உட்கொள்ள முடியாமல் யானை அவதிப்பட்டது. நான் அங்கு சென்று அதற்கு சிகிச்சை அளித்தேன். அதோடு உணவு முறையில் மாற்றம் செய்தேன். புரதச் சத்து அதிகம் நிறைந்த அரிசி, சோயாபீன் என வேகவைத்த உணவு வழங்கப்பட்டது. அது அதன் ஆயுள் காலத்தை அதிகரித்தது” என பிரபல யானை அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான குஷால் கோன்வர் சர்மா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT