மதுரை: மதுரையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்து கோயில்களுக்கு சாம்பிராணி தூபமிடும் நற்செயலில் ஈடுபட்டு வருகிறார் இஸ்லாமியரான சேட்.
மதுரை கருப்பாயூரணி அருகே, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சம்சுதீன் மகன் சேட் என்ற கனகாபிச்சை (45). இவரது மனைவி சையதலி பாத்திமா, மகன் பிரான்மலை, மகள் பர்வின் பானு ஆகியோர் உள்ளனர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள், வீடுகளுக்குச் சென்று தூபம் எனும் சாம்பிராணி புகை போடும் தொழில் செய்து வருகிறார்.
இதில் மதம் கடந்து இந்து கோயில்களுக்கும் சென்று சாம்பிராணி புகை போட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து சேட் என்ற கனகாபிச்சை கூறியதாவது: இறைவனை வழிபடும் போது தீப, தூப ஆராதனைகள் செய்து வழிபடுவர். சாம்பிராணி எனும் நறுமணப் புகையை வீடுகள், கடைகளில் இடுவதால் இறையருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சாம்பிராணி புகை (தூபம்) போடுவதை 25 வயதிலிருந்து செய்து வருகிறேன்.மதம் கடந்து இஸ்லாமியர் அல்லாத வீடுகள், கடைகளுக்கும் சென்று சாம்பிராணி தூபமிட்டு வருகிறேன். காலையில் அழகர்கோவில் சாலையில் தல்லாகுளம் பகுதியில் காவல் நிலையம் தொடங்கி பாண்டியன் ஹோட்டல், டிஆர்ஒ காலனி, பேங்க் காலனி, அய்யர்பங்களாவில் முடிப்பேன்.
கடைகள், வீடுகளுக்கு சென்று சாம்பிராணி போடும்போது இன்முகத்துடன் வரவேற்று காணிக்கை செலுத்துவதுபோல் பணம் தருவர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிப்பேன். பின்னர் மாலையில் 5 மணிக்கு செல்லூர் பகுதியில் தொடங்கி இரவு 7 மணிக்கு கோரிப் பாளையத்தில் முடிப்பேன். ஒரு நாளைக்கு நயம் சாம்பிராணிக்கு மட்டும் ரூ.800 வரை செலவாகிறது.
செலவு போக ஒரு நாளைக்கு ரூ.1000 கிடைக்கும். கடைகளில் தொழில் விருத்தி அடையவும், வீடுகளில் நோய், நொடியின்றி வாழவும், மாணவர்கள் நன்றாக படிக்கவும் ‘துஆ’ செய்து சாம்பிராணி புகை போடுவேன். சொக்கிகுளம் பகுதி நவசக்தி விநாயகர் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சாம்பிராணி புகை போடுகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலை செய்து வருகிறேன். என்னை சாம்பிராணி சேட் என்றால் தான் தெரியும். வியாழன், வெள்ளிக் கிழமைகளில் கோரிப்பாளையம் தர்கா பகுதியில் தாகிரா பாடல் பாட சென்றுவிடுவேன். ஒருசில நாட்கள் பலூன் விற்கச் சென்று விடுவேன். இதில் மதம் கடந்து மனிதம் காக்கும் வகையில் பலரும் உதவியாகவே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.