மும்பை: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. பல மாநிலங்களில் இதன் விலை கிலோவுக்கு ரூ.200-க்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் தக்காளி விலை விண்ணைத் தொட்டு வருகிறது. தக்காளியை விற்று கோடிக் கணக்கில் பணம் ஈட்டியதாக பல பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு விவசாயி தனது வயலில் தக்காளியை விளைவித்துள்ளார். அங்கு தக்காளியைத் திருடி விடுவார்கள் என்ற அச்சம் உள்ளதால் வயலில் கண்காணிப்பு கேமரா வைத்து அவர் பாதுகாத்து வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஷாபூர் பஞ்சார் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஷரத் ராவ்டே, தனது வயலில் தக்காளியை பயிரிட்டுள்ளார். இப்பகுதியில் 22 கிலோ முதல் 25 கிலோ அடங்கிய தக்காளி பழங்கள் பெட்டி ரூ.3 ஆயிரம் வரை விலை போகிறது. எனவே, வயலில் இருந்து தக்காளியை திருடர்கள் திருடிச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது.
இதையடுத்து தனது 5 ஏக்கர் பரப்புள்ள வயலில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார் ஷரத் ராவ்டே. ஒன்றரை ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருந்தாலும், இந்த முறை ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் ராவ்டே உள்ளார்.
இதுகுறித்து ஷரத் ராவ்டே கூறும்போது, “எங்களது கிராமம் அருகிலுள்ள கங்காப்பூர் பகுதியில் எனக்கு வயல் உளளது. அங்கு விளைவித்திருந்த 25 கிலோ தக்காளியை 10 நாட்களுக்கு முன்பு சிலர் திருடிச் சென்றுவிட்டனர். எனவே, வயலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினேன்.
இந்தக் கேமராக்கள் சூரிய சக்தி மூலம் இயங்குபவை. எனவே,மின் இணைப்பு இல்லாமலேயே இவை இயங்கும். மேலும் இந்த கேமராக்களை எனது செல்போனில் இணைத்துள்ளேன். அதன்மூலம் அடிக்கடி வயலை கண்காணித்துக் கொள்வேன்’’ என்றார்.