அறுவடை செய்த மலை நெல்லை சுவாமிக்கு படைக்க மாடுகளில் எடுத்து சென்ற விவசாயிகள். 
வாழ்வியல்

அழிவின் விளிம்பில் ‘பாரம்பரிய மலை நெல்’ - சுவாமிக்கு படையலிடும் கொடைக்கானல் விவசாயிகள்

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மலை நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

கொடைக்கானலில் பழங்குடியினர் பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி ஆகிய மேல்மலை கிராமங்களில் பாரம்பரியமான ‘மலைநெல்’ சாகுபடியை பல நூறு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை தங்களின் உணவுத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த வகை நெல்லுக்கு செங்குறுவை, கருங்குறுவை என்ற பெயர்களும் உண்டு.

விதைத்த 9 மாதங்களில் மலை நெல்லை அறுவடை செய்யலாம். அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டது எனக் கூறுகின்றனர். காலப்போக்கில் தண்ணீர் தட்டுப்பாடு, வருவாய் தேவைக்காக மாற்று விவசாயத்துக்கு மாறியதால் கடந்த 25 ஆண்டுகளாக மேல்மலை கிராமங்களில் மலை நெல் சாகுபடி அழிவின் விளம்பில் உள்ளது.

தற்போது பூண்டி கிராமத்தில் 4 குடும்பத்தினர் மட்டும் பாரம்பரியத்தை கைவிடாமல் மலை நெல்லை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு கார்த்திகை மாதம் நடவு செய்த நெல்லை, தற்போது அறுவடை செய்து, பாரம்பரிய முறையில் மாடுகளில் வைத்து கிளாவரை கிராமத்தில் உள்ள சந்திரகுமார சுவாமி கோயிலில் படைத்து வழிபாடு நடத்தினர்.

இது குறித்து பூண்டியை சேர்ந்த விவசாயி மனோ கூறியதாவது: இந்தாண்டு அரை ஏக்கருக்கு மலை நெல் அறுவடை செய்துள்ளேன். இந்த நெல் சாகுபடிக்கு ரசாயன உரம் பயன்படுத்துவதில்லை. பல்வேறு சத்துகள், மருத்துவக் குணம் கொண்டது. இந்த நெல்லை யாருக்கும் நாங்கள் விற்பனை செய்வதில்லை.

முன்னோர்களை போல குடும்பத்தினரின் உணவுத் தேவைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வோம். மலை நெல் அறுவடைக் காலம் அதிகம் என்பதால் பலரும் இந்த நெல் சாகுபடியையே கைவிட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT