காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பறவைகள், விவசாயத்துக்காக தீவுடன் கண்மாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால் 2 போக விவசாயம் நடக்கிறது.
காரைக்குடி அருகே கொத்தமங்கலம் ஊராட்சி சின்ன வடகுடிப்பட்டி கிராமத்தில் 48.43 ஏக்கரில் பெரிய கண்மாய் உள்ளது. மொத்தம் 2.31 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இக்கண்மாய் மூலம் 200 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் இக்கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாராததால் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு, பலரும் விவசாயத்தை கை விட்டனர். இதனால் பல ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்பட்டன. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால், அக்கண்மாயை 2021-ம் ஆண்டு ரூ.1.5 கோடியில் ஏஎம்எம் அறக்கட்டளை தூர்வாரியது. பிறை வடிவமாக இருந்த அந்த கண்மாய் தற்போது குளம்போல் மாற்றப்பட்டது.
வரத்துக் கால்வாய்களும் சீரமைக்கப்பட்டன. மேலும் இக்கண்மாய்க்கு அதிகளவில் வெளி நாட்டு பறவைகள் வருவதால், அவை தங்குவதற்கு வசதியாக கண்மாய் நடுவே தீவு உருவாக்கப்பட்டது. ஊராட்சி சார்பில் நூறு நாள் திட்டம் மூலம் தீவு பகுதி, கரை பகுதிகளில் சுற்றிலும் பல வகை பழமரக்கன்றுகள் நடப்பட்டன.
ஒரு மாதத்துக் குள் தண்ணீர் வற்றி வந்த கண்மாய், தற்போது ஆண்டு முழுவதும் வற்றாமல் நீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகளும் 2-ம் போகமாக சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இது குறித்து கொத்தமங்கலம் ஊராட்சித் தலைவர் அழகுபாண்டி கூறியதாவது: கண்மாய் ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர் வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. தூர் வாரிய மண்ணை வைத்து தீவை உருவாக்கினர். மொத்தம் 3 தீவுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 50 மீ., விட்டம், 15 மீ., உயரம் கொண்டது.
அதேபோல் 50 ஏக்கர் பாசன வசதி கொண்ட செட்டியான் கண்மாயையும் அதே அறக்கட்டளை தூர்வாரி கொடுத்தது. 2 கண்மாய்களையும் தூர்வாரியதால் சின்ன வடகுடிப்பட்டியே பசுமையாக மாறியுள்ளது. ஒருபோக விவசாயம் செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் தற்போது 2 போகம் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.