வாழ்வியல்

தமிழகத்தில் சர்க்கரை நோய் பாதித்த ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் ‘இதயங்கள்’

இல.ராஜகோபால்

கோவை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி செய்து வரும் கோவையை சேர்ந்த ‘இதயங்கள் அறக்கட்டளைக்கு’ தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது: ஒன்று முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ‘டைப் 1’ சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, கண் பார்வை குறைபாடு, அதிக பசி உள்ளிட்டவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.

இந்த நோயை தொடக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள தவறினால் ‘டயபடிக் கோமா’ என்று சொல்லக்கூடிய நிலைக்கு சென்று மரணம் ஏற்படும். இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு எங்கள் அறக்கட்டளை சார்பில் இன்சுலின் மற்றும் மருந்து வழங்கி வருகிறோம். இன்சுலின் மருந்தை ஃபிரிட்ஜில்தான் வைக்க வேண்டும். இது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தவிர, கோவை அரசு மருத்துவமனை மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு சிறிய ஃபிரிட்ஜ் வழங்கி உள்ளோம்.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும், கோவை மாவட்டத்தில் 700 குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 500 குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குழந்தைக்கு ஓராண்டு முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்து வழங்க 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

விருது வழங்கி கெளரவிப்பு: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,200-க்கும் மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உயர்தர இன்சுலின், சர்க்கரை அளவை அறியும் குளுக்கோ மீட்டர் சாதனம், இன்சுலின் பம்ப், வலி குறைவான 4 எம்எம் ஊசி, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல உதவிகள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

நாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அங்கீகரித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதை வழங்கினார்.

கோவையில் தொடங்கிய இதயங்கள் அறக்கட்டளையின் பணி தற்போது, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல அரசு மருத்துவ மனைகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்துடன் (தமிழ்நாடு பிரிவு ) இணைந்து ஆயிரக் கணக்கான குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது.

மருத்துவ கவுன்சில் சார்பில் வழங்கப்பட்டுள்ள விருது இதயங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான ‘தமிழகத்தில் முதல் வகை சர்க்கரை குறைபாடு கொண்ட ஒரு குழந்தை கூட தரமான மருத்துவமின்றி இன்னல் படக்கூடாது’ என்ற உயர் எண்ணத்துக்கு ஊன்றுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் வகை சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த 20 வயதுக்குட்பட்டவர்கள் உதவி பெற, இதயங்கள் அறக்கட்டளையை 90428 58882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வலைதள முகவரி: www.idhayangal.org இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமின்றி என்னுடன் இரவு, பகல் பாராமல் பணியாற்றிவரும் எங்களது அணியினருக்கும், கருணை உள்ளத்துடன் எங்களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்துவரும் அனைவருக்கும் சமர்ப்பணம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT