அ
ந்த கோலை அவர் அடித்த போது பலரும் நம்பவில்லை. காரணம், அவருக்கு இருந்தது ஒற்றைக் கால் மட்டும்தான்!
உடலில் வேறு எந்த உறுப்பில் அடிபடுவது அல்லது வேறு எந்த உறுப்பையும் இழப்பதைவிடவும் கொடுமையானது, காலை இழப்பது. ஏனென்றால், அது உங்களின் நகர்வை முடக்கிப் போட்டுவிடக் கூடிய ஒன்று. ஆதியிலிருந்து நகர்ந்து கொண்டே இருக்கும் மனிதர்களின் கால்களை வெட்டிவிட்டு, அவர்களை ஒரே இடத்தில் இருக்கச் சொன்னால், அதைவிட நரகம் வேறில்லை!
சீனாவைச் சேர்ந்த 21 வயது ஹி யீயீ, அந்த நரகத்திலிருந்து வெளியே வர விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த பாதை… கால்பந்து. ‘எக்ஸிபிஷன் மேட்ச்’ ஒன்றில், ஒற்றைக் காலால் அவர் கால்பந்து விளையாடும் காட்சி சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. அதற்கு இடப்படும் லைக்குகள் ‘ஸ்டில் கவுண்ட்டிங்…!’
சிறுவனாக இருந்தபோதே யீயீ கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார். 2008-ம் ஆண்டு, அவருடைய விளையாட்டைக் கண்டு ஆச்சரியமடைந்த பிரெஞ்சு நாட்டுக் கால்பந்து வீரர் ஒருவர், அவரது திறமையை மெருகூட்ட நினைத்தார். யீயீ, அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள பிரான்ஸுக்குச் செல்லத் தயாராக இருந்த நேரம், இடியாக இறங்கியது அந்த வலி!
யீயீக்கு, 12 வயதிலிருந்தே காலில் ஆஸ்டியோசார்கோமா எனும் நோய் இருந்துவந்தது. அதாவது, கால் எலும்பில் ஏற்படும் வலி. பரிசோதித்துப் பார்த்ததில், அது எலும்புப் புற்றுநோய் என்று தெரியவந்தது. பிரான்ஸுக்குச் சென்று பயிற்சி பெற்று, கால்பந்தாட்ட வரலாற்றில் தடம் பதிக்கக் காத்திருந்த யீயீ, தனது இடது காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
‘கால்தானே போயிற்று. கால்கள் இல்லையே!’ என்று தன்னம்பிக்கையுடன் எழுந்துவந்தார் யீயீ. கைகள் இரண்டிலும் ஊன்றுகோலின் உதவியுடன், மீண்டும் கால்பந்தாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.
மீண்டும் தன்னால் கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தைத் துரத்தி ஓட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த யீயீக்கு, இன்னொரு விதத்தில் தடங்கல் ஏற்பட்டது. அது, போட்டிக்காக நடத்தப்படும் ‘புரொஃபெஷனல்’ கால்பந்து விளையாட்டுகளில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படவில்லை.
அதற்காக அவர் மனம் தளரவில்லை. ‘அமெச்சூர்’ கால்பந்தாட்டப் போட்டிகளில் அவர் பங்கேற்றார். அந்தப் போட்டிகளில், இவர் மட்டும்தான் மாற்றுத்திறனாளி! ஆரம்பத்தில், அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளம். ஆனால், மனம் தளராமல் பந்தைத் துரத்திக் கொண்டேயிருக்கிறார் யீயீ.
“தப்பித் தவறி என்னுடைய ஊன்றுகோல்கள் இதர விளையாட்டு வீரர்களைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே, நான் மலிவு விலை ஊன்றுகோல்களைப் பயன்படுத்துகிறேன். காரணம், அப்படியே தப்பித் தவறி, இதர வீரர்களின் கால்கள் எனது ஊன்றுகோலில் பட்டுவிட்டால், ஊன்றுகோல்தான் உடையுமே தவிர, வீரர்களின் கால்களுக்குப் பாதிப்பு ஏற்படாது!” என்று சொல்கிற யீயீயை, அவருடைய ரசிகர்கள் ‘சிறகொடிந்த தேவதை’, ‘மேஜிக் பாய்’ என்றெல்லாம் புகழ்கிறார்கள்.
இந்தச் சின்ன வயதில், இப்படி ஒரு இழப்பிலும் எப்படி இவரால் துணிந்து நிற்க முடிகிறது?
“வீட்டில் உட்கார்ந்துகொண்டு புலம்பாதீர்கள். வாழ்க்கையை பாஸிட்டிவ் ஆகப் பாருங்கள். உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு நமது புன்னகையைப் பரிசளிப்பது நலமாக இருக்குமில்லையா?” என்ற இவர், உண்மையான விளையாட்டு வீரராகிறார், தன்னம்பிக்கையின் அழ‘கால்!’
கால்பந்தாட்டத்தைக் காண