நா
ட்டில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளம் நமக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது வருங்கால சந்ததிக்கும் சொந்தமானது அல்லவா? எப்படி நம் முன்னோர்கள் நமக்காக அதைப் பாதுகாத்து வைத்தார்களோ, அதைப் போல் நம் வருங்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாத்து வைப்பது நம் கடமைதானே. இந்தக் கடமை உணர்வுதான் நதிகள் இணைப்பு மற்றும் முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்க அந்த இளைஞருக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. அவர், சந்தான பீர் ஒளி!
சுருளி அருவி, தேக்கடி, மேகமலை, மூணாறு போன்ற இயற்கை அழகைக் கொண்டுள்ள இடங்களால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் இருக்கும் பசுமை நிறைந்த உத்தமபாளையம்தான் இவரது பூர்விகம். இவர் இயற்கையின் மேல் தீராக் காதல் கொண்டவர். ஜான் பென்னிகுயிக் எனும் ஆங்கிலப் பொறியாளர், தன் வீடு, உடைமைகளை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார் என்ற வரலாற்றை சிறு வயதில் கேட்டதிலிருந்து பென்னிகுயிக் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரியவனான பிறகு பென்னிகுயிக் போன்று இயன்றவரை இந்தச் சமூகத்துக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்தே அவருக்கு இருந்து வருகிறது.
“கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, குடும்பச் சூழல் காரணமாக மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சில வருடங்கள் வேலை பார்த்தேன். ஆனால், பென்னிகுயிக் நினைவலைகள் காட்டாற்றைப் போல் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தன. வேலை நேரம் போக, மற்ற நேரம், அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தேன். உடன் பணிபுரிந்த ஈரானைச் சேர்ந்த ஒரு சகோதரிதான், லண்டனில் மேற்படிப்பு படித்தால், படிப்புடன் சேர்த்து பென்னிகுயிக் வம்சாவளியினரைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாமே என்று யோசனை கூறினார். வெறும் யோசனையுடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. எங்குப் படிப்பது, எப்படி விண்ணப்பிப்பது, எப்படி அங்கே செல்வது என எல்லா வழிகளையும் சொல்லிக் கொடுத்தார். வங்கியில் கல்விக் கடன் பெற்று, லண்டனுக்குப் படிக்கச் சென்றேன்” என்கிறார் பீர் ஒளி.
லண்டனுக்குச் சென்றவுடன், படிப்பின் ஊடே பென்னிகுயிக் குடும்பத்தினரைத் தேடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பயணம் அவருக்கு வாழ்வின் பல கேள்விகளுக்கு விடை தருவதாக இருந்தது. தன் வாழ்க்கையின் நோக்கமும் அதை அடையும் பாதையும் அவர் கண்முன்னே விரிய ஆரம்பித்தன. அந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் நிலவிவந்த தண்ணீர்ப் பஞ்சம், காவிரிப் பிரச்சினை, தண்ணீரின்றித் தவித்த விவசாயிகளின் வேதனை போன்றவை இவரை வெகுவாகப் பாதித்தன. ‘ஒரு பக்கம் தண்ணீரின்றி வாடுகிறோம், மறுபக்கம் நம் ஆறுகளில் கிடைக்கிற தண்ணீரை முறையாகச் சேமிக்காமல் ஏன் வீணடிக்கிறோம்’ என்ற கேள்வி இவரைத் துளைத்தெடுத்தது. வீணடிப்பது மட்டுமல்லாமல், கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் அவற்றில் குப்பையையும் கழிவையும் கலக்குகிறோமே என்று வருந்தினார்.
“அப்போதுதான் எனக்கு ஓரு யோசனை தோன்றியது. மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலந்து வீணான பெரியாறு தண்ணீரை, வறண்டு கிடந்த கிழக்குப் பக்கம் திருப்பி செழிப்படையச் செய்த பென்னிகுயிக் பற்றிய முழு விஷயங்களையும், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கான குடிநீரில் கழிவு கலக்காமல் இருக்க அவர் செயல்படுத்திய திட்டங்களையும் உடனே ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்க ஆரம்பித்தேன். தொழிநுட்ப வளர்ச்சியற்ற, 19-ம் நூற்றாண்டிலேயே ஆற்றின் திசையை மாற்ற முடிந்தது என்றால், தொழில்நுட்ப வளர்ச்சிமிக்க இந்த 21-ம் நூற்றாண்டில் ஏன் எல்லா ஆறுகளையும் உரிய முறையில் பயன்படுத்த முடியாது என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. இரண்டையும் வைத்து ஓர் ஆவணப்படம் எடுப்பது அவசியம் என்று தீர்மானித்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக என் சொந்தச் செலவில் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் ஆவணப் படத்துடன் சந்திக்கிறேன்” என்றார்.
அதெல்லாம் சரி, லண்டனில் பென்னி குயிக்கின் குடும்பத்தினர் இதைப் பற்றியெல்லம் என்ன சொல்கிறார்கள் என்றதற்கு. “பென்னிகுயிக்கின் கொள்ளுப்பேரன் ஜான் பென்னிகுயிக்கைச் சந்தித்தது, ஒரு மறக்க முடியாத அனுபவம். தேனி, மதுரை மாவட்டங்களில் பென்னிகுயிக்குக்குச் சிலை வைத்து மரியாதை செய்வதைப் பற்றிச் சொன்னேன். ‘ஏன்’ என்று ஜான் கேட்டார். கொள்ளுத்தாத்தாவைப் பற்றியோ அவரது பெருமையைப் பற்றியோ அவருக்கு எதுவும் தெரியவில்லை. காரணங்களைச் சொன்ன பிறகு பூரித்துப் போனார்” என்கிறார் பீர் ஒளி.