விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் பயிரிடப்பட்டுள்ள எண்ணெய் பனை. 
வாழ்வியல்

தலைமுறையை வாழ வைக்கும் எண்ணெய் பனை - விழுப்புரம் மாவட்டத்தில் 350 ஹெக்டேரில் சாகுபடி

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: அதிக எண்ணெய் உற்பத்தித் திறன் மூலம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்வது பாமாயில் எனப்படும் எண்ணெய் பனையே. இந்த எண்ணெய் பனை தற்போது நாட்டில் 3.16 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

கடைகளில் பாக்கெட் செய்து விற்கப்படும் கடலை எண்ணெயில் 60 சதவீதம் பயன்படுத்தப்படுவது எண்ணெய் பனையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான். தாவர எண்ணையான இதனால் எவ்வித கெடுதலும் இல்லை. இதன் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இந்திய அளவில் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் பயிர்களில் முதலிடம் பிடிப்பது எண்ணெய் பனையாகும். இது சமையலுக்கு மட்டுமின்றி, அழகு சாதன பொருட்களாகவும், சில இடங்களில் வேறு சில பொருட்களுடன் கலவையான எரிபொருளாகவும் பயன்படுகிறது.

1886-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டனில் இந்த எண்ணெய் பனை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தாயகம் மேற்கு ஆப்ரிக்காவாகும். 1947-ம் ஆண்டு பூனாவுக்குள் நுழைந்து, 1984-90-களில் கேரள மாநிலம், பின்னர் வடகிழக்கு மாநிலங்களில் இதன் சாகுபடி பரவியது. 2021-22-ம் ஆண்டு வரை தமிழக வேளாண் துறையில் இருந்த எண்ணெய் பனை, 2022-23-ம் ஆண்டில் தோட்டக்கலைத் துறைக்கு மாற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் எண்ணெய் பனையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் உற்பத்தி குறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கு.அன்பழகனிடம் கேட்டபோது, “ஒரு ஹெக்டேர் நிலத்தில் முக்கோண வடிவில் 9 மீட்டர் இடைவெளி கொடுத்து 143 மரக்கன்றுகளை நடலாம். இதற்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

‘கோத்ரெஜ் அக்ரோவிட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, ரூ.140 விலையுள்ள எண்ணெய் பனை கன்றுகளை பெற்று, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறது. மகசூலை அதே நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. தற்போது டன்னுக்கு ரூ.13,346 அளிக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு 8 டன்னுக்கு மேல் உற்பத்தி செய்யும் விவசாயிக்கு டன்னுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

நடவு செய்த 3 ஆண்டுகளில் ஊடுபயிராக காய்கறிகள், வாழை போன்றவைகளை பயிரிடலாம். இதற்கு ஹெக்டேருக்கு ரூ.10,500-ஐ 3 ஆண்டுகளுக்கு அரசு வழங்குகிறது. அதன் பின் ஊடுபயிராக மிளகு, கோக்கோ போன்ற பயிர்களை பயிரிடலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, மயிலம், கோலியனூர், கண்டமங்கலம், காணை, திருவெண்ணெய்நல்லூர் வட்டாரங்களில் 350 ஹெக்டேரில் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ளது.

பயிரிட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் மகசூலைப் பெறலாம். அதிகபட்சம் 35 ஆண்டுகள் வரை இதன்மூலம் பலன் கிடைக்கும். எனவே தான் இதை 'தலைமுறையை வாழ வைக்கும் பயிர்' என்கிறார்கள்.

இந்தப் பயிருக்கு நிலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால். சொட்டுநீர் பாசனமே சிறந்தது. இதனைப் பயிரிடும் விவசாயிக்கு கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க, மின் மோட்டார் வாங்க, சொட்டுநீர் பாசனம் அமைக்க, அறுவடை உளி வாங்க அரசால் மானியம் வழங்கப்படுகிறது.

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் எண்ணெய் பனை மிக அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளைப் போலல்லாமல் இந்தியாவில் எண்ணெய் பனை சிறுசிறு பரப்பளவில் தோட்டக்கலை பயிராக பயிரிடப்படுகிறது. மேலும், இந்தியாவில் எண்ணெய் பனை 90 சதவீதத்துக்கும் மேல் பாசனப் பயிராக வளர்க்கப்படுகிறது.

சொட்டு நீர்பாசன முறையை ஏற்றுக்கொள்வது மற்றும் தானியங்கி நீர்பாசன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும், தேவையான அளவு தண்ணீரை தருவதன் மூலமும் தேவைக்கு அதிகமான நீரை மற்ற பயிர்களை வளர்ப்பதற்கு திருப்பி விட முடியும். மேலும், மண் மற்றும் இலை மாதிரிகளை அவ்வப்போது பரிசோதித்து தேவையான அளவு ஊட்டச்சத்துகளை துல்லியமான விகிதத்தில் வழங்க தோட்டக்கலைத்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த எண்ணெய் பனை சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளன. நெல், கரும்பு மற்றும் காய்கறி பயிர்களைத் தாண்டி இதுபோன்ற பயிர் வளர்ப்பில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். இதற்கு உரிய வழிகாட்டுதல்களை தர நம் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையினர் ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை அணுகலாம்.வ்

SCROLL FOR NEXT