வாழ்வியல்

மருத்துவத் துறையிலும் சாதனை புரிந்த அப்துல் கலாம் | நினைவு தின பகிர்வு

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: வெகுளித் தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். அவ்வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் அம்மாணவரது கணித ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்.

அவனைப் பார்த்தவுடனே, அவனது கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார் அவர். இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து, கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியதற்காக அந்த மாணவனை அதே ஆசிரியர், காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார்.

‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்' என்று வேறு தெரிவித்தார். ஆம், அவரது வாக்கின்படி, அந்தப் பள்ளிக்கும் அந்த ஊருக்கும், தமிழகத்துக்கும், ஏன் நாட்டுக்கே பெருமை சேர்த்த அந்த ‘மகத்தான' மாணவன் வேறு யாரும் அல்ல. அவர்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

ராமேசுவரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்.15-ம் தேதி பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு, வீடாகச் சென்று நாளிதழ் விநியோகிக்கும் வேலையைக் கூடச் செய்துள்ளார்.

ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி.யில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.

1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக் கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர்.

பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா எனப் பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் ஆகிய 3 துறைகளிலும் ஒருசேர உழைத்த ஒரே அறிஞர் கலாம். பணி ஓய்வுபெற்ற பின்பு நாட்டின் அறிவியல் ஆலோசகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார். 2002 ஜூலையில் குடியரசுத் தலைவரானர்.

குடியரசுத் தலைவர் பதவிக் காலத்துக்குப் பின்பு அப்துல் கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். 27.7.2015-ல் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு, தேசிய நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், ராக்கெட்களை தயாரித்ததைப் போன்று, போலியோவால் பாதிக்கப்பட்டோருக்கான எடை குறைந்த காலிபர்களையும், மாற்றுத் திறனாளிகளுக்காக எடை குறைந்த செயற்கைக் கால்கள்,

இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவியையும் கண்டுபிடிக்க அப்துல் கலாம் உதவினார். இதை தனக்குப் பிடித்தமான கண்டுப்பிடிப்புகள் என்று ‘அக்னி சிறகுகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். போலியாவால் பாதித்த குழந்தைகள் 4 கிலோ எடை கொண்ட இரும்புக் காலணிகள் (காலிபர்கள்) அணிந்து நடக்க சிரமப்படுவதைப் பார்த்த கலாம் அதற்கு மாற்று என்னவென்று யோசித்தார்.

அக்னி ஏவுகணையில் பயன்படுத்தக்கூடிய ஒரு பிரத்யேக உலோகத்தை கொண்டு 400 கிராம் எடையில் காலிபரை உருவாக்கினார். இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஸ்டென்ட்’ லட்சக்கணக்கான ரூபாய் விலையில் இருந்தது. ஆனால், இதை மிகக் குறைந்த விலையில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கேர் அறக்கட்டளையின் நிறுவனர் ராஜூவுடன் இணைந்து உருவாக்கினார். இது கலாம் - ராஜூ ஸ்டென்ட் என்று அழைக்கப்படுகிறது.

இதற்காக கேர் அறக்கட்டளை 1998-ல் ‘டிஃபென்ஸ் டெக்னாலஜி ஸ்பின்-ஆஃப்’ என்ற விருதைப் பெற்றது. கலாமின் மருத்துவக் கண்டுபிடிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் எடை குறைவான காலிபர்களையும், கலாம் - ராஜூ ஸ்டென்ட் கருவிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைந்த விலையில் உருவாக்கி தேவைப்படுவோருக்கு வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT