கோவை: கோவை புத்தகத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை ‘வாழ்க்கையும் வாசிப்பும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில், பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசியதாவது:
எழுத்தாளர்கள் தனியாக இருந்து எழுதுவார்கள். சிற்பி தனியாக இருந்து சிலை வடிப்பான். ஓவியன் தனியாக இருந்துதான் ஓவியம் வரைவான். ஒரு நடனக் கலைஞன் மன அழுத்தத்தில் இருக்கும் போது, நடராஜர் சிலைக்கு முன் தனியாக நின்று நடனமாடுவான். தனியாக நிகழ்த்த முடியாத நிகழ்த்துக் கலை இந்த பேச்சாற்றல்.
பேசுபவர், அதைக் கேட்பவர்கள் இருந்தால் போதும். ஒரு பேச்சாளரின் சிறந்த பகுதி நிச்சயமாக ஏற்கெனவே தயாரிக்கப்பட்டதாக இருக்காது. பேசும் இடத்தின் சூழலுக்கேற்ப, சிந்திக்காத சிந்தனையொன்று மேடையில் தோன்றும். கேட்பவர்கள் ஆர்வத்துடன் இருக்கும் போது அது வெளிப்படும். புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதே, அதுதான் பேச்சாளர்களின் முதல் படி.
ஆனால் பலருக்கும் படிக்க விருப்பம் இருப்பதில்லை. படிப்பதால் என்ன பயன் என்று கேள்வி கேட்பார்கள். ‘வகுப்பறையில் கேள்வி கேட்டால் அப்போதுதான் நீ முட்டாள். கேட்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் முட்டாள்’ என்கிறது, சீனப் பழமொழி. ஒவ்வொருவர் மனதிலும் காயம் இருக்கிறது. வேதனை இருக்கிறது. தோல்வி இருக்கிறது. அவமானம் இருக்கிறது.
இதை ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஆறுதல் தரும் ஒரு நபரை அறிமுகப்படுத்துகிறது, இந்த வாசிப்பு. காயத்திற்கு மருந்து கிடைக்கிறது. வாழ்க்கையில் ஒளிக்கீற்றைப் பாய்ச்சுகிறது. இவ்வாறு அவர் பேசினார். கொடிசியா தலைவர் திருஞானம், கோவை புத்தகத் திருவிழா தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.