தென்காசி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. காற்று காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் விவரம்: காற்று காலங்களில் மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்லக் கூடாது. வாகனங்களை மின் கம்பிகளுக்கு அடியில் நிறுத்தக் கூடாது. மின் கம்பிகள் மற்றும் சர்வீஸ் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது.
இது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதோடு, மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை அப்புறப்படுத்த முயற்சிக்க கூடாது.
பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையவை என்பதால், மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
மின் கம்பத்துக்கு போடப் பட்டுள்ள ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ கூடாது. மின் கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்களில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.
மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்தடை தொடர்பான புகார்களுக்கு மின்னகத்தின் மின் நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். மின்வேலி அமைப்பதால் அதில் சிக்கி மக்களும், வன விலங்குகள், கால்நடைகளும் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப் படுவதுடன், மின் நுகர்வோர் மீது காவல்துறை மூலம் குற்ற வழக்கு தொடரப்படும்.