கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வைப்பாறு கோயிலில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வைப்பாறு கிராமத்தில் உள்ள வில்லாயுத மூர்த்தி கோயிலில், பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் குணசேகரன், தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர், முனைவர் தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோயில் வளாகத்தில் பழமையான கொற்றவை சிலை இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆரம்ப காலங்களில் செங்கற்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள்தான் அதிகம். 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. 8-ம் நூற்றாண்டு மத்தியில் கற்றளி அமைக்கும் வழக்கம் தொடங்கியது. கற்றளி என்பது கற்களைப் பயன்படுத்தி கோயில் கட்டுவதாகும்.
முதலில் சிவனுக்குத்தான் கற்றளிகள் எழுப்பப்பட்டன. அவற்றில் அம்மனுக்கு தனி சந்நிதி கிடையாது. விநாயகர், முருகன், சப்தகன்னிகை, சண்டிகேஸ்வரருக்கு தனித்தனி சந்நிதிகள் இருந்துள்ளன. இந்தக் கோயில்களில் சிவனுக்குப் பிறகு, கொற்றவை வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழர்களின் தாய் தெய்வ வழிபாட்டில் கொற்றவை வழிபாடும் ஒன்று. வட தமிழகத்தில் செதுக்கப்பட்ட கொற்றவை சிற்பம், 8 கரங்களுடன் இருந்தது. ஆனால், பாண்டிய நாட்டில் செதுக்கப்பட்ட பெரும்பாலான கொற்றவை சிற்பங்கள் 4 கரங்களுடன் காட்சியளித்தன.
தற்போது வைப்பாறு கோயிலில் உள்ள கொற்றவை சிற்பம் 4 கரங்களுடன், புடைப்புச் சிற்பமாக உள்ளது. சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் அழகுற காட்சி தருகிறாள் கொற்றவை.
இந்த சிற்பத்தின் மகுடம், கரண்ட மகுடமாகும். கரண்ட மகுடம் என்பது, உருளையான, கூர்மையான வடிவத்தில் இருக்கும். இரு காதுகளிலும் பத்திர குண்டலம் காணப்படுகிறது. வலது மேல் கரத்தில் பிரயோக சக்கரம் உள்ளது. சிற்பத்தின் இடது மேல் கையில் சங்கு காணப்படுகிறது.
இந்த கொற்றவை சிற்பம் மிகவும் சிதைந்து காணப்படுகிறது. இதன் காலம் 8-ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும். இதுபோன்ற பழமையான சிற்பம் அரிதாகவே காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.வைப்பாறு வில்லாயுதமூர்த்தி கோயிலில் உள்ள கொற்றவை சிற்பம்.