கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்து வரும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி யில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 5-ம் தேதி முதல் 29-வது ஆண்டு அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் அரசு துறை அரங்குகளும், தனியார் அங்காடிகள் மற்றும் கலையரங்கம், மா கண்காட்சி, கேளிக்கை அரங்குகள், தின்பண்ட கடைகள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள் என அனைத்து துறைகளுடைய அரசு சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை கச்சேரிகள், பட்டிமன்றங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள், துண்டு பிரசுரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்தும், அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏகே-47 துப்பாக்கி: இதில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், போலீஸார் பயன்படுத்தும் பல்வேறு ரக துப்பாக்கிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஏகே-47, கார்பன், எஸ்எல்ஆர், ரிவால்வர், சிக்னல் பிஸ்டல் உட்பட 15 வகையான துப்பாக்கிகள், ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துப்பாக்கியும் எவ்வாறு பயன்படுத்துவது, எந்த சூழ்நிலையில் எந்த துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும். காவலர்கள் குற்றவாளிகளை பிடிக்கும் போது பயன்படுத்தும் ஆயுதங்கள் குறித்து அங்கு பணியில் இருக்கும் போலீஸார் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
1.25 லட்சம் பார்வையாளர்கள்: இதுகுறித்து மாங்கனி விழாக்குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் கூறும்போது, மாங்கனி கண்காட்சியில் 142 ரக மாங்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இதேபோல், காவல்துறை அரங்கில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு ரக துப்பாக்கிகளை பார்வையாளர்கள் ஆர்வமாக பார்த்துச் செல்கின்றனர். மேலும், இக்கண்காட்சி தொடங்கி 15 நாட்களில், இதுவரை சுமார் 1.25 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்று உள்ளதாக தெரிவித்தனர்.