கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் தூண்கள் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய ஓவியங்களால் பளிச்சிடுகின்றன. கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்காக 300-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்படுகின்றன. காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பார்க் கேட் முதல் டெக்ஸ்டூல் ரவுண்டானா வரையும், நூறடி சாலையிலும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. திருச்சி சாலையில் பழைய பதி தியேட்டர்முதல் ராமநாதபுரம் சந்திப்பை தாண்டிஅல்வேர்னியா பள்ளி அருகே வரைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்களின் தூண்களிலும், அவற்றின் சுவர்களிலும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தன. இதனால் தூண்கள் அசுத்தமாக காணப்பட்டன.
சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் எந்த பலனும் இல்லை.
இந்நிலையில், மேம்பாலத் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் தன்னார்வ அமைப்புடன் இணைந்து ஓவியங்கள் வரைய திட்டமிடப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த ஓவியங்கள்பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மேம்பாலங்களின் தூண்கள், சுவர்களை அழகாக வைத்திருப்பது மிக அவசியமாகும். அது நகரின் சுகாதாரத்தை பிரதிபலிப்பதாக அமையும். எனவே, முதல்கட்டமாக உப்பிலிபாளையத்தில் உள்ள அண்ணா மேம்பாலத்தின் தூண்களில் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்திபுரம் நஞ்சப்பா சாலை மேம்பாலம், நூறடி சாலை மேம்பாலம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இயற்கை காட்சிகள், வன விலங்குகள் உலா வருவது, பசுமையான சூழலை நினைவுபடுத்தும் காட்சிகள், பறவைகள், சுதந்திர போராட்ட தியாகிகள், விளையாட்டுகள் என பல்வேறு வகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அதேபோல், ‘பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாட்டை தவிர்ப்போம், மழைநீரை சேகரிப்போம், குப்பையை தரம் பிரித்து வழங்குவோம், மரம் வளர்ப்போம், மழைபெறுவோம், சாலை விதிகளை பின்பற்றுவோம், தலைக்கவசம் அணிந்துவாகனங்களை இயக்குவோம்’ என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஓவியங்களும் வரையப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.