அரசு ராஜாஜி மருத்துவமனையில் கவுரவிக்கப்பட்ட ஜீவநதி அமைப்பை சேர்ந்தோர். 
வாழ்வியல்

23 ஆண்டுகளில் 2,000 ரத்த தான முகாம்கள் - சாதிக்கும் மதுரை இளைஞர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பிறப்பு முதல் இறப்பு வரை உடலில் வற்றாத ஜீவ நிதியாக ஓடும் ரத்தம் கடவுள் அளிக்கிற கொடை. அந்த ரத்தத்தை கடைசி வரை நன்கொடையாக கொடுக்க வேண்டும் என்பதற்காக, மதுரையில் உள்ள வாகன விற்பனை நிறுவனங்கள்,

நகை மற்றும் ஜவுளி கடைகள், தனியார் நிறுவனங்களுக்குச் சென்று அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ரத்த தானம் செய்ய வைக்கிறார்கள் ‘ஜீவ நதி' அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்.

ஒருவரை ரத்த தானம் செய்ய வைப்பதே சிரமம். ஆனால், இவர்கள் கடந்த 23 ஆண்டுகளில் 2 ஆயிரம் முகாம்களை நடத்தி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ரத்த தானம் செய்ய வைத்துள்ளனர். இவர்களின் ‘ஜீவ நதி’ அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக அளவு ரத்தம் சேகரித்து கொடுத்து முதலிடம் பிடித்துள்ளது.

இவர்களின் சேவையை பாராட்டும் வகையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

எஸ்.கணேஷ் முருகன்

இவர் கூறியதாவது: ‘‘2001 டிசம்பர் 26-ம் தேதி யதார்த்தமாக நானும், நண்பர்களும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதன் முதலாக ரத்த தானம் செய்தோம். அதேநாளில் குஜராத்தில் பூகம்பம் நடந்தது. அந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்பட்டது. நாங்கள் வழங்கிய ரத்தம் குஜராத் அனுப்பி வைக்கப்பட்டது. ரத்தத்தின் தேவையை அன்றுதான் உணர்ந்தோம்.

அந்த உணர்வே, நாங்கள் குழுவாகச் சேர்ந்து ஜீவ நதி அமைப்பை உருவாக்க தூண்டியது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, அதிகளவு ரத்தம் சேகரித்து கொடுக்கும் இயக்கமாக உள்ளோம். ஏப்ரல் மே, ஜூன் மாதங்களில் அரசு மருத்துவமனையில் ரத்தத்துக்கு தட்டுப்பாடு இருக்கும்.

இந்த கால கட்டத்தில் மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை தேடிச் சென்று ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு செய்து ரத்த தானம் செய்ய வைக்கிறோம். இப்படியாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தினோம். எனது பணி நேரம் போக மீதி நேரத்தில் ரத்த தான விழிப்புணர்வு செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரத்த தானத்தில் தன்னிறைவு பெறுவது எப்படி?: ரத்த தானம் கேட்பவர்கள் பெரும்பாலும், இதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறார்கள். ரத்த தானம் கொடுப்பதற்கென்றே தனியாக இருப்போரை நாடினால் ரத்தம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். பலருக்கு ரத்தம் தேவைப்படும்போது, அவர்கள் குடும்பத்தில் அவரது ரத்தம் எந்த குரூப் என்று கூட தெரியாமல் உள்ளனர்.

தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ‘வாட்ஸ் ஆப் குரூப்’ வைத்துள்ளனர். அந்த குரூப்பில் முதலில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் ரத்த வகையை குரூப்பில் பதிவிட்டு தெரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது முதலில் உறவுகளுக்குள் தேட வேண்டும். அடுத்து நெருங்கிய நட்பில் தேட வேண்டும். பற்றாக்குறை இருந்தால் மட்டுமே வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரத்தம் கொடுக்கும் நபர்களை தேட வேண்டும்.

இது தான் ரத்ததானம் தேவைப்படுவோருக்கு சரியான தேடல் முறை. ஆனால் பெரும்பாலானோர் முதலில் வெளியில் இருந்து ரத்தம் தேடுகிறார்கள். அதனால் அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்ற நோயாளிகளுக்கு ரத்தம் கொடுக்க முடியாமல் போகிறது. ரத்த தானத்தில் தன்னிறைவு பெற ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவராவது ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்.

SCROLL FOR NEXT