வாழ்வியல்

காலையில் யோகா மாஸ்டர்... மாலையில் டீ மாஸ்டார்... ஸ்ரீவில்லி.யில் ஓர் அசத்தல் மனிதர்!

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் காலையில் யோகா மாஸ்டர் ஆகவும், மாலையில் டீ மாஸ்டராகவும் பரபரப்பாக இயங்கி வரும் ஒருவர் கலையிலும், கடையிலும் அசத்தி வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (46). டீக்கடை வைத்திருக்கும் இவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்வதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு யோகா கலையை கற்றுக்கொண்டார். கரோனா ஊரடங்கால் பலருக்கும் யோகா கற்றுத் தரும் மாஸ்டராக மாறினார். இவரிடம் யோகா பயின்று வரும் மாணவர்கள், மாநில மற்றும் தேசிய போட்டிகள் மட்டுமின்றி, சர்வதேச யோகா போட்டியிலும் பங்கேற்று சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இது குறித்து கருப்பசாமி கூறியதாவது: ‘10-ம் வகுப்பு முடித்த பிறகு உடற்பயிற்சி, ஜிம்னாஸ்டிக், தற்காப்புக் கலை போன்ற வற்றில் முழு ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களாகச் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கி அவர்களுக்கு உடற் பயிற்சி, தற்காப்புக்கலை பயிற்சி அளித்தேன்.

மாலை நேரத்தில் தந்தையின் டீ கடையில் அவருக்கு உதவியாக இருந்தேன். 2006-ம் ஆண்டு எனக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு மூச்சு விடவே சிரமமாக இருந் தது. இது குறித்து மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்றும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. மேலும் தூக்க மின்மையால் மன அழுத்தம் அதிகரித்தது.

பின்னர் மனைவியின் ஆலோசனைப்படி 31-வது வயதில் அழகர் என்பவரிடம் யோகா பயிற்சி பெற்றேன். சில மாதங்களிலேயே மூச்சுப் பிரச்சினை சீரானது. அதன்பின், தொடர்ந்து காலையில் யோகா பயிற்சி, மாலையில் டீக்கடையும் நடத்தி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யோகா ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்து சான்றிதழ் பெற்றேன்.

ஸ்ரீமத் ஸ்ரீதர் சித்தர் கோயிலில் யோகா பயிற்சி செய்து வந்தேன். கரோனா ஊரடங்கு காலத்தில் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரும் யோகா கற்றுத் தரும்படி கூறினர். அதிலிருந்து அனைவருக்கும் இலவசமாக தினசரி காலை யோகா வகுப்பு எடுத்து வருகிறேன். இதில் 20-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர். வரும் காலத்தில் முழு நேர யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT