மதுரை: சமூக (தெரு) நாய்களை காக்கவும், விபத்தில் சிக்கும் நாய்களுக்கு சிகிச்சை அளித்து அதனை காப்பதற்கும் காப்பகம் நடத்தி ‘விலங்குகளின் காவலனாக’ திகழ்கிறார் மதுரை இளைஞர்.
மதுரையைச் சேர்ந்தவர் சாய்மயூர் ஹஸீஜா (38). சாலை விபத்தில் சிக்கும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார். விலங்குகள் மீது அளப்பரிய பாசம் வைத்துள்ள இவர், தெருவில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் நாய்களை ‘தெருநாய்கள்’ என்று அழைப்பதுகூட தவறு என்கிறார். அவற்றை ‘சமூக நாய்கள்’ என்றே அழைத்து வருகிறார்.
நாய்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அதோடு நாய்களை யாராவது தொந்தரவு செய்தால், அவர்களை பற்றி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் குரல் கொடுத்து வருகிறார். இது குறித்து சாய்மயூர் ஹஸீஜா கூறியதாவது: மதுரை கோமதிபுரத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறேன்.
அமெரிக்கன் கல்லூரியில் பி.காம். படித்து முடித்துவிட்டு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினேன். அங்கு ஆதரவற்றோர், முதியோர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் 10 ஆண்டுகள் பணியாற்றினேன். இந்நிலையில், சாலையில் வாகனத்தில் அடிபட்டு காயமடையும் நாய்கள், மாடுகள் சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு வேதனை அடைந்தேன்.
அவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதை கடமையாக கருதி செய்து வருகிறேன். பராமரிப்பின்றி திரியும் சமூக நாய்கள், மாடுகள், குதிரைகள் ஆகியவற்றுக்கு கடந்த 5 ஆண்டுகளாக உணவளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். பொதுவாகவே நாய் என்றால் வெறிநாய் எனக் கருதி மனிதர்கள் தாக்குகின்றனர். இது தவறு. இந்த அணுகுமுறையிலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
நாய்களை துன்புறுத்துவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எனக்கு உதவ தொழிலதிபர் அசோக்குமார், அவர் பயன்படுத்திய கார், நாய்களை பிடித்து கொண்டு செல்ல கூண்டுகள் கொடுத்து உதவியுள்ளார்.
சமூக நாய்களுக்கான காப்பகம் நடத்துவதற்கு அலங்காநல்லூர் அருகே தண்டலை கிராமத்தில் சதீஷ் என்பவர் இலவசமாக இடம் கொடுத்துள்ளார். அந்த இடத்தில் காப்பகம் நடத்தி வருகிறேன். தினமும் 25 சமூக நாய்களுக்கு உணவு அளித்து காப்பாற்றி வருகிறேன். சமூக நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அதனை அடித்துக் கொல்லக் கூடாது, அதற்கு கருத்தடை செய்தாலே போதும். இவ்வாறு அவர் கூறினார்.