பயணங்கள் வாழ்வில் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்துவை. சோர்ந்து கிடக்கும் உடலுக்கும், மனதுக்கும் அனுபவங்களையும், புத்துணர்வையும் தரக்கூடியவை.
புதிய மனிதர்களையும், புதிய மொழிகளையும், புதிய கலாச்சாரங்களையும் அறியவும், கற்கவும் வாய்ப்பளிப்பவை இந்தப் பயணங்கள். அந்த பயணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மேற்கொள்வார்கள். அப்படி ஒரு முறை, பொழுதுபோக்காக தனது பயணத்தை தொடர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஜோதி மணிகண்டன். தற்போது அதுவே அவருக்கு முழுநேர பயணமாக மாறி, இந்தியா முழுவதும் தன்னுடைய ‘யுவான்’னுடன் சுற்றிதிரிகிறார். தன்னுடைய ‘பைக்’கை அவர் அப்படிதான் அழைக்கிறார். சமீபத்தில் மதுரை வந்தவர், இமயமலை சென்ற அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
சாப்ட்வேர் இன்ஜினியரான அவர், பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி என்றாலும், ஆண்டில் சில மாதம் வேலைப்பார்ப்பது, மற்ற மாதங்களில் பைக்கை எடுத்துக் கொண்டு ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதுபோல் நாடோடியாக உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என சுற்றிதிரிந்து கொண்டிருக்கிறார்.
அவர் கூறுகையில், ‘‘கடந்த 2007ம் ஆண்டு முதல் 5 முறை இமயமலை சென்றுள்ளேன். கடந்த ஆண்டு மே 21ம் தேதி 5வது முறையாக பைக்கில் சென்றுள்ளேன். இமயமலையில் ஏற்கனவே சென்றபோது அதிகபட்சமான உயரங்களை தொட்டுப்பார்த்துவிட்டேன். இந்த முறை, உலகின் மிக உயரமான சாலையான உம்லிங் லாவில் (Umling la) பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது.
திட்டமிட்டப்படி அந்த சாலையில் பயணம் செய்தது பேரானந்தமாக இருந்தது. இந்த முறை குளிர்காலத்தில் இமயமலை எப்படியிருக்கிறது, மக்கள் எப்படி வசிக்கிறார்கள், அவர்கள் வாழ்க்கை முறையையும், பருவகாலங்களில் எப்படி இமயைமலை மாறுகிறது என்பதை பார்க்க முடிவு செய்தேன்.
அதற்காக முன் பனி காலம் முதல் பின் பனி காலம் வரை ஒரு ஆண்டு 26 நாட்கள் இமயமலையில் கார்கில், லடாக், சகாரா போன்ற இடங்களில் தங்கியிருந்தேன். உலகத்திலேயே 2வது குளிர் மிகுந்த இடமாக இமயமலையில் உள்ள சோசில்லா(zozila) கருதப்படுகிறது. இந்த இடத்துக்கும் இந்த முறை சென்றேன். இமயமலையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.
பெரும்பாலும் நாடோடிகள், லடாக்கிஸ் என்ற சுற்றுவட்டார பழங்குடியின மக்கள், இந்திய ராணுவத்தினரும் மட்டுமே அங்கே இருப்பார்கள். ஆரியன்வேலி, ஜான்ஸ்கார் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய இமயமலை கிராமங்களில் மட்டுமே மக்கள் வசிப்பார்கள். ஒரளவு வசதிப் படைத்தவர்கள், வியாபாரிகள் சிலர், நாடோடிகள் மட்டுமே அங்கு இருப்பார்கள். இந்த குளிர் காலத்தில் சாலைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும். விமானங்களில் மட்டும் சென்று வரலாம்.
இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் வருவதற்கு இமயமலையில் ‘லே’ (leh), லடாக் நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். ‘கார்கில்’ பகுதியில் மற்றொரு ஏர்போர்ட் உள்ளது. அதை ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மேலும் அங்கு 95 சதவீதம் கடைகள் இருக்காது. இமயமலையில் கடை வைத்திருப்போரில் பெரும்பாலானவர்கள், ஒரிஷா, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாமை சேர்ந்தவர்கள். மார்ச் மாதம் தொடங்கியதும் வெளியேறிய மக்கள் திரும்பி உள்ளே வருவார்கள்.
அங்கு வசிக்கும் மக்கள் தற்சார்பு வாழ்க்கை முறையை கடைபிடிப்பார்கிறார்கள். தானியங்கள், பயிர் வகைகள் கெட்டுப்போகாது. அதனால், அந்த வகை உணவுகளை 6 மாதத்துக்கு சேகரித்து வைக்கிறார்கள். மற்றொரு ஆச்சரியமான விஷயம், அனைத்து வீடுகளிலும் உணவு தானியங்களை சேகரித்து வைக்க கண்டிப்பாக ஒரு ஸ்டோர் அறை வைத்திருக்கிறார்கள். இந்த அறைகளில் நம்மூர் பீன்ஸ் காய்கறியை கூட கெட்டுப்போகாமல் 4 மாதம் வரை பராமரிக்கிறார்கள்.
நம்மூரில் புகாரி ஹோட்டல் என்பதை கேள்விப்பட்டிருப்போம். புகாரி என்பதற்கு உண்மையான அர்த்தமே எனக்கு இமயமலை சென்றபோதுதான் தெரிந்தது. ஒவ்வொரு வீடுகளில் வைத்திருகு்கும் அடுப்புகளை அவர்கள் புகாரி என்றே கூறுகிறார்கள். புகாரி அடுப்புகளுக்கான புகைப்போக்கியின் பைப் வெளியே நீண்டு கொண்டிருக்கும்.
உயரமான இடங்களில் இருந்து மாலை நேரங்களில் பார்க்கும்போது ஒவ்வொரு வீடுகளில் சமையல் நடக்கும்போது புகாரி அடுப்புகளில் இருந்து வெளியேறும் புகையும், அந்த வீடுகளையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
எல்லா காலங்களிலும் இமயமலையில் நிகழும் மாற்றம் ரொம்ப அழகாகவே தெரியும். பனி காலம் தொடங்கும்போது பனி நம்மை நோக்கி வர, நாள் ஆக ஆக வெள்ளை முகடுகள், நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் சுற்றிப்பார்க்கிற எல்லாமே வெள்ளையாக மாறியிருக்கும்.
ஏப்ரல் முதல், இரண்டாவது வாரத்தில் பூக்கும் ‘ஆப்ரிக்காட்’ ஒரு வகை மரப்பூக்கள் கார்கில் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் 8 முதல் 10 கி.மீ., வரை கண்ணுக்கு எட்டும்தூரம் வரை இலைகளிலேயே இல்லாமல் பூத்து குலுங்கும். அந்த அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த வசந்த காலத்தை கிராம மக்கள் கொண்டாடுவார்கள். கலாச்சார உடைகளை அணிந்து ஆடி, பாடி மகிழ்வார்கள்.
இமயமலையும், அதன் அழகையும் குடியிருக்கும் மக்களையும் அழகாக படம்பிடித்துள்ளேன். அதனை ஆவணப்படுத்தவும் முடிவு செய்துள்ளேன்.’’ என்றார்.