அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கவுள்ளார். இவர் திருமதி சர்வதேச ஆசிய பசிபிக் பகுதியின் பிரதிநிதியாக கலந்துகொள்ள உள்ளார்.
திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். இதில் 70க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தப் போட்டி ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 22 வரை நடைபெறும் நிலையில், அதில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கிறார்.
இந்த போட்டி பல சுற்றுகளாக நடைபெறும். இதில் விளையாட்டான சுற்றுகளும் உண்டு. தீவிரமான சுற்றுக்களும் உண்டு. தீவிரச் சுற்றுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் இருக்கின்றன. இதில் உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று சுற்றுகள் நடைபெறும். உடற்தகுதிச் சுற்றில் உடல் பராமரிப்பு, தன்னம்பிக்கை மனத்திடம் ஆகியவை பார்க்கப்படும். இதற்கு 25% மதிப்பெண்கள் உண்டு.
அடுத்ததாக தனிநபர் நேர்காணல் சுற்று நடக்கும். இதில் 5 நீதிபதிகள் இருப்பர். 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடங்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். இதற்கு 50% மதிப்பெண்கள் உண்டு.
அடுத்ததாக ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்காரச் சுற்று. இதில் பெண்கள் தங்களுடைய கணவருடன் பங்கேற்க வேண்டும். இதில் ஒரு கணவன் பெண்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று. இதைத்தவிர, Bath bomb making, Axe throwing, சோப் மேக்கிங், பேஸ்பால், வைன் இன் வெட்ஜெஸ் என்கிற ஜாலியான சுற்றுக்களும் உண்டு. இதற்கு மதிப்பெண்கள் கிடையாது.
மேலே கூறிய தீவிரமான சுற்றுக்களில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் 16 பேரும் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தச் சமூக பிரச்சனைகள் பற்றியும், அதை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் 30 நொடிகளில் பேச வேண்டும். பிறகு அவர்கள் அதில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சுற்றின் இறுதியில் 5 பேரை தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இறுதி போட்டிகள் நடைபெறும்
பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இந்த சுற்றில் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமை ஆகிய சமூக பிரச்சனைகளை தேர்ந்தெடுத்து பேசவுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி (Ms.International World People's Choice Winner 2022) என்ற பட்டம் வென்று அசத்தியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இவர், "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
இதனிடையேதான், திருமதி உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ள நளினி, ஆசியா, பசிபிக் பகுதிகள் சார்பாக இதில் கலந்துகொள்கிறார். இந்தப் போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுவதற்காக தனித்தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "வெற்றி வேண்டும் என்றால் வலியை அனுபவிக்க வேண்டும். இந்தப் போட்டிகளுக்காக, தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, தியானம் போன்ற உடல் பராமரிப்புடன், நேர்மறை சிந்தனையைக் கொண்ட மனநிலையையும் பராமரிக்கிறேன்" என்றுள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதித்த சமயம் அந்தப் பாதிப்பால் மரணப் படுக்கைக்குச் சென்ற பிளாரன்ஸ் ஹெலன் நளினி, தன்னை காப்பாற்றியது யோகாவும், நம்பிக்கையும்தான் எனச் சொல்கிறார். அதனால் போட்டிக்காக மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகிய இரண்டுக்கும் உடலைப் பராமரிப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்.
கோவையைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முன்னதாக, இளநிலை பட்டமாக லைஃப் சயின்ஸ், முதுநிலை பட்டமாக பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷன், எம்பிஏ மார்க்கெட்டிங் அண்ட் ஹெச்.ஆர், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். இதைத் தவிர பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷனில் முனைவர் பட்டம், உளவியலில் முதுநிலை முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். உளவியலில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கி இருக்கும் அவர், லைப் ஸ்கில் பயிற்சியாளர், யோகா பயிற்சியாளர், ஹோல்னஸ் அன்ட் வெல்னஸ் அமைப்பின் பயிற்சியாளர் எனப் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
குழந்தை கல்வியில் உதவி செய்ய வேண்டும் அதுவே தன் லட்சியம் என்று குறிப்பிடும் இவர், ஏற்கெனவே நிதி திரட்டி உலகம் முழுவதும் உதவி செய்தும் வருகிறார். ஷ்ரேயாஸ் குளோபல் அகாடமி - ட்ரிவன் பிலிவ் ஃபவுட்னேஷன் மூலம் குழந்தைகளின் கல்விக்காக 8500 டாலர்கள் நிதி திரட்டியதுடன், உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காகவும் நிதி திரட்டி வருகிறார்.
இந்தியா கல்வி தரத்தில் மிகச் சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்றும், இந்தியாவில் பிறக்கும் அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்பதே லட்சியம் என்னும் இவர், சிறு வயதில் தன் தந்தையால் தன்னைப் படிக்க வைக்க முடியவில்லை என்றும், குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து கடினமாக உழைத்து முன்னேறியதால் இன்று அனைவருக்கும் கல்வி வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.