செயற்கை இனிப்பூட்டியான அஸ்பர்டேம் (Aspartame) புற்றுநோய் விளைவிக்கும் பொருளாக உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையுடன் (IARC) இணைந்து இம்மாதம் 14 ஆம் தேதி இந்த எச்சரிக்கை வெளிப்படையாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.
அஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப் பெயர் தான் நமக்கு பரிச்சியம் இல்லையே தவிர அது அடங்கிய உணவுப் பதார்த்தங்கள் நமக்கு நன்கு பரிச்சியமானவையே. குழந்தைகள், இளைஞர்கள், வயதானோர் என அனைவரும் உட்கொள்ளும் ஐஸ்க்ரீம், கார்பனேடட் குளிர்பானங்கள், பபுள் கம் என அழைக்கப்படும் சூயிங் கம் ஆகியனவற்றில் இந்த அஸ்பர்டேம் உள்ளது.
அஸ்பர்டேம் என்றால் என்ன? அஸ்பர்டேம் என்பது வாசனையில்லாத, வெள்ளை நிறத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏதுமற்ற இனிப்பூட்டி. இது இயற்கையான சர்க்கரையைவிட இனிப்பு சுவை அதிகம் கொண்டது. சுகர் ஃப்ரீ, லோ கலோர் என்று அழைக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் அனைத்துமே இந்த அஸ்பர்டேம் மூலக்கூறு கொண்டவைதான். அஸ்பர்டேமில் அஸ்பர்டிக் அமிலம் மற்றும் ஃபினைலால்னைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன.
அஸ்பர்டேம் உடலை எப்படி பாதிக்கும்? ஹெல்த்லைன் மீடியா என்ற பத்திரிகைக் குறிப்பில், அஸ்பர்டேம் நம் உடலுக்குள் செல்லும்போது அது மெத்தனாலாக உடைகிறது. சில காய்கறிகளும் பழங்களும் மெத்தனாலை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அஸ்பர்டேம் உடலுக்குள் சென்று ஜீரணத்தின்போது சூடாக்கப்படும்போது அது ஃப்ரீ மெத்தனாலை விடுவிக்கிறது. ஃப்ரீ மெத்தனால் நம் உடலில் தொடர்ச்சியாக சேரும்போது அது ஃபார்மால்டிஹைடாக உருவெடுக்கும். ஃபார்மால்டிஹைட் ஏற்கெனவே அறியப்பட்ட புற்றுநோய் காரணி. மேலும் நியூரோடாக்சின் எனப்படும் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சாகவும் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான் செயற்கை இனிப்பூட்டியான அஸ்பர்டேமையும் உலக சுகாதார நிறுவனம் விரைவில் புற்றுநோய் காரணியை ஏற்படுத்தக்கூடிய பொருளாகப் பட்டியலிட இருக்கிறது.
இவர்கள் நிச்சயமாக தவிர்க்க வேண்டும்: ஃபினைல்கீடோநியூரியா என்ற குறைபாடு உடையவர்கள் அஸ்பர்டேம் இருக்கும் உணவுப் பதார்த்தங்களை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். அவர்களால் ஃபினைலலனினை முழுமையாக கிரஹித்துக் கொள்ள இயலாது. அதேவேளையில் அஸ்பர்டேமை எவ்வளவு உட்கொள்ளலாம் என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கமான உணவு சுவையூட்டிகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஜெக்ஃபா (JECFA -the Joint WHO and Food and Agriculture Organization's Expert Committee on Food Additives), வரையறுக்கும் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பு கண்டனம்: இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிக்கு சர்வதேச செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஹண்ட் வுட், "சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையான ஐஏஆர்சி உணவுப் பாதுகாப்பு அமைப்பு அல்ல. அஸ்பர்டேம் பற்றிய கருத்துகள் அறிவியல்பூர்வமாக நிறுவப்படவில்லை. அந்த ஆராய்ச்சிகள் ஏதும் உணவு பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஐஏஆர்சியின் கருத்து வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.