வாழ்வியல்

பேனாவுக்கு சிகிச்சை அளிக்க ‘மருத்துவமனை’ @ திண்டுக்கல்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் உள்ளன. உயிரோட்டமான படைப்புகளை உரு வாக்கும் கருவியான பேனாவுக்கும் ஆஸ்பத்திரி இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..

திண்டுக்கல்லில்தான் உள்ளது அந்த ஆஸ்பத்திரி. பேனா பழுதுநீக்கும் கடைக்கு சற்று வித்தியாசமாக யோசித்து ‘பேனா ஆஸ்பத்திரி’ என பெயர் வைத்து மூன்று தலைமுறைகளாக நடத்தி வருகின்றனர் ஒரு குடும்பத்தினர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள ‘ஷேக் மைதீன் பேனா ஆஸ்பத்திரி’யில் பழுதான பேனாவை சரிசெய்வதோடு, பல வகையான பேனாக்களையும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

5 ரூபாய் முதல் ரூ.800 வரை பால்பாயின்ட் பேனாக்கள் விற்பனைக்கு உள்ளன. இந்த பேனா ஆஸ்பத்திரியின் சிறப்பு அம்சமே மை பேனாக்கள் தான். 30 ரூபாய் முதல் 1000 ரூபாய் பார்க்கர் பேனா வரை இங்கு கிடைக்கிறது. எந்த வகை பேனாவாக இருந்தாலும் சரிசெய்து கொடுத்து விடுகிறார்கள். மை பேனாக்களுக்கு தேவையான நிப்பு, கட்டை, மை நிரப்பும் டியூப் என அனைத்து உதிரி பாகங்களும் வைத்துள்ளனர்.

எழுதாத பேனாக்களை சரிசெய்து எழுத வைத்து கொடுக்கின்றனர். 3-வது தலைமுறையாக பேனா ஆஸ்பத்திரி நடத்தி வரும் முகமது சிகாப்தீன் கூறியதாவது: எனது தாத்தா 1975-ம் ஆண்டு இந்த கடையை தொடங்கினார். எனது தந்தை கமருதீன், இந்த கடைக்கு எனது தாத்தா நினைவாக ‘ஷேக் மைதீன் பேனா ஆஸ்பத்திரி’ என பெயர் வைத்தார்.

அவருடன் தற்போது நானும் மூன்றாவது தலைமுறையாக இணைந்து இந்த கடையை நடத்தி வருகிறேன். கடை முன் பேனாவுக்கு தேவையான மையை எப்போதும் வைத்திருப்போம். பள்ளி மாணவர்கள் தங்கள் பேனாக்களுக்கு இலவசமாக மை நிரப்பிக் கொண்டு செல்வர். பள்ளி மாணவர்கள் மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால் இன்றும் மை பேனாவுக்கு தேவை உள்ளது.

அதிகாரிகள் பலரும் தாங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தும் மை பேனா பழுதானால் அதை எங்களிடம் வந்து சரி செய்து செல்கின்றனர். மை பேனாவுக்கான அனைத்து உதிரி பாகங்களும் வைத்துள்ளோம். இந்த கடையின் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை.

எனினும், எனது தாத்தா தொடங்கியதை எனது அப்பா தொடர்ந்து நடத்தஎண்ணினார். அவரது வழியில் நானும் தொடர்கிறேன். விரைவில் 50-வது ஆண்டை எட்ட உள்ளது இந்த பேனா ஆஸ்பத்திரி. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT