ஷில்லாங்: 16 வயது நிரம்பிய நபருக்கும், தான் பாலியல் உறவில் ஈடுபட வேண்டுமா என்ற முடிவை எடுக்கும் திறன் இருக்கும் என்று மேகாலயா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்சோ வழக்கில் மேகாலயா உயர் நீதிமன்றத் தீர்ப்பின்போது தனி நபர் அமர்வு தெரிவித்த இந்தக் கருத்து கவனம் ஈர்த்துள்ளது.
போக்சோ சட்டப் பிரிவு 3 மற்றும் 4-ன்படி குழந்தைகளை பாலியல் தொந்தரவு அல்லது வல்லுறவுக்கு உட்படுத்துவது குற்றம். இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை. அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்தச் சட்டப் பிரிவுகளின் கீழ் 16 வயது சிறுவன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டபோது உயர் நீதிமன்றம் மேற்கண்ட கருத்தை முன்வைத்தது.
முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட 16 வயது நபர் தனது மனுவில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியிருந்தார். அதில் அவர், ”நான் நிச்சயமாக பாலியல் வன்முறையில் ஈடுபடவில்லை. நானும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். அதனால், அந்தப் பாலுறவு முழுக்க முழுக்க இருவரின் ஒப்புதலுடனும் நடந்தது அதனால் என் மீது போக்சோ சட்டப் பிரிவுகள் 3 மற்றும் 4-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.டிங்தோ, "இந்த நீதிமன்றம் பதின்ம வயதில் உள்ள வளரிளம் பருவத்தினரின் மனம் மற்றும் உடல் சார்ந்த வளர்ச்சியைக் கருத்தில் கொள்கிறது. அதன் அடிப்படையில் 16 வயது நபர் பாலுறவில் ஈடுபடுவது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்கும் திறன் கொண்டவர் என்று தர்க்கரீதியாக நம்புகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்தச் சிறுவன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வெளிநாடுகளில் வளரிளம் பருவத்தினரின் பாலுறவு, ஆரோக்கியம் பற்றிய விவாதங்கள் வெளிப்படையாக நடைபெறும் சூழலில் பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வியை முழுவீச்சில் அமல்படுத்தத் தயங்கும் சூழலில், இந்தியா போன்று பல்வேறு வளரும் நாடுகளும் சவால்களை சந்திக்கின்றன. இச்சூழலில் மேகாலயா நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.