மதுரை: உயிர் காக்கும் குருதியை 154 முறை தானம் செய்து பல உயிர்களை காப்பாற்றிய 74 வயது ‘இளைஞர்’ மதுரையைச் சேர்ந்த வி.எம்.ஜோஸ், கல்லூரிகள் தோறும் சென்று இளைஞர்களிடம் ரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்
மதுரை பாண்டிகோவில் பகுதியைச் சேர்ந்தவர் வி.எம்.ஜோஸ் (74). அச்சகம் நடத்தி வந்தார். இவரது மனைவி மேரி ரான்சம் ஜோஸ். ஓய்வு பெற்ற ஆசிரியை. சமூக சேவையில் அக்கறையுள்ள வி.எம்.ஜோஸ் 154 முறை ரத்த தானம் செய்து மதுரை மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். இவரது சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.
வயது முதிர்வால் தற்போது ரத்த தானம் செய்ய முடியாவிட்டாலும் ரத்த தானத்தின் அவசியம் குறித்து கல்லூரிகளுக்கு சென்று இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். குழந்தை இல்லாத இத்தம்பதி, தங்கள் இறப்புக்குப் பிறகு இவர்கள் வசிக்கும் வீட்டை தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு செலவழிக்குமாறு உயில் எழுதி வைத்துள்ளனர்.
இது குறித்து வி.எம்.ஜோஸ் கூறியதாவது: எனக்கு பூர்வீகம் கேரளா என்றாலும் நான் பிறந்தது மதுரையில் தான் சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்பு எனது 22 வயதில் மதுரை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய ஆரம்பித்தேன். பின்னர் தொடர்ந்து ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறேன். இதுவரை 154 முறை ரத்த தானம் செய்துள்ளேன். நானும், மனைவியும் உடல் தானம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.