வாழ்வியல்

செயற்கையாக பழுக்க வைக்கும் கல் நெஞ்சக்காரர்கள் - நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஆவடி: ’இந்து தமிழ் திசை’ நாளிதழின் ’உங்கள் குரல்’ பிரத்யேக புகார் எண் சேவையை தொடர்பு கொண்டு, சென்னை - திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த வாசகர் முஹமது ஹசன் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல், ஜூலை வரை மாம்பழ சீசன் களை கட்டும். அந்தவகையில், தற்போது களை கட்டும்மாம்பழ சீசனில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏராளமான மாம்பழம் விற்பனை கடைகள் அணி வகுத்து நிற்கின்றன.

இந்த கடைகளில் அல்போன்சா, இமாம்பசந்த், பங்கன பள்ளி, ஜவ்வாரி, மல்கோவா என பல்வேறுவகையான மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.அவ்வாறு விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களே விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக, ஜாம்பஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழம் கிலோ 50ரூபாய்க்கும், இயற்கையாக பழுத்த மாம்பழம் கிலோ 100ரூபாய் என வெளிப்படையாக கூறியே வியாபாரிகள் விற்கின்றனர். கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடும் பொதுமக்கள், வாந்தி, பேதி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

ஆகவே, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விரிவான சோதனை நடத்தி, கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ’’ கோயம்பேடு சந்தை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கார்பைடு கல் வைத்து பழுக்கவைத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்து வருகிறோம்.

செயற்கையாக பழுக்க வைத்திருந்தது தெரிய வந்தால், அதனை பறிமுதல் செய்து அழித்து வருகிறோம். மேலும், கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பதில், வேலை பளு அதிகம். ஆகவே, கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைப்பது குறைந்துள்ளது. மாறாக, அரசு அனுமதித்துள்ள, உடலுக்கு உபாதை ஏற்படுத்தாத வகையிலான, செயற்கை முறையிலான எத்திலீன் வாயு மூலம் மாம்பழத்தை பழுக்க வைக்கும் முறையை பெரும்பாலான வியாபாரிகள் கையாள்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் சூடாகவும், தோல் பகுதிகள் கரும்புள்ளிகளுடன் இருக்கும். ஆகவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தரமான மாம்பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும். மேலும், வாங்கும் மாம்பழங்களை தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்து, கழுவினால், அதில் எந்த வேதிப்பொருட்கள் இருந்தாலும் அவை வெளியேறி விடும். பிறகு, தோலை நீக்கி மாம்பழத்தை சாப்பிடலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT