புதுடெல்லி: பிபர்ஜாய் புயலால் கடந்த 2 நாட்களாக ராஜஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு மத்தியிலும், அம்மாநிலத்தில் கேஸ் சிலிண்டர் ஏஜென்சி ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்து வருகின்றனர்.
பார்மர் நகரில் ஊழியர் ஒருவர், கொட்டும் கன மழையில் ஒரு வாடிக்கையாளரின் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை, மத்திய இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அந்த ஊழியரின் கடமை உணர்வை பாராட்டியுள்ளார்.
“அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும். நாடு வளர்ந்து கொண்டே இருக்கும். இண்டேன் கேஸ் ஏஜென்சி ஊழியர் ராஜஸ்தான் பார்மரில் கன மழைக்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்கிறார். அவரது இந்த கடமை உணர்வு பாராட்டத்தக்கது” என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஊழியரின் கடமை உணர்வை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.