புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நேற்று நடைபெற்ற ஒரு மொய் விருந்தில் மொய் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளோர். 
வாழ்வியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னதாகவே தொடங்கிய மொய் விருந்து விழா

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி வட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு நபர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஒவ்வொரு இடத்திலும் 15-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் மொய் விருந்து விழா நடத்துவர். ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மொய் விருந்து நடக்கும். இதில், மொய் விருந்து நடத்துபவர்களுக்கு லட்சங்களிலும், கோடிகளிலும் மொய் தொகை கிடைக்கும்.

விவசாயம் சார்ந்த பகுதியாக விளங்கக்கூடிய இப்பகுதி கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளானது. மேலும், கரோனா தொற்று மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் மொய் விருந்திலும் எதிரொலித்தது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக மொய் விருந்து நடத்தியவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கிடைக்காததால், மொய் விருந்து விழாவும் களையிழந்தது.

இந்நிலையில், வழக்கமாக ஆடி மாதத்தில் தொடங்கும் மொய் விருந்து நிகழாண்டு ஒருமாதம் முன்னதாக ஆனி மாதத்திலேயே தொடங்கி உள்ளது. நிகழாண்டுக்கான மொய் விருந்து விழா கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று தொடங்கியது. 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து நடத்திய மொய் விருந்தில் கலந்துகொண்டோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

இதுகுறித்து மொய் விருந்து நடத்தி வருவோர் கூறியது: ஆலங்குடி வட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் அதிகபட்சம் ஆயிரம் பேர் வீதம் மொய் வரவு- செலவு வைத்துள்ளனர். மொய் செய்த தொகையில் இருந்து இரு மடங்கு தொகைக்கும் மேல் வசூலாகும். இந்தத் தொகை அவரவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வந்தது. வழக்கமாக ஆடி மாதத்தில் தான் மொய் விருந்து நடக்கும்.

ஆனால், புயல், மழை, வறட்சி மற்றும் கரோனா தொற்றால் கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மொய் விருந்துகள் சற்று களையிழந்து காணப்பட்டது. எனவே, ஆடி மாதத்தில் மொய் விருந்து வைத்தால், மொய் தொகை குறைவாகிவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றார்.

SCROLL FOR NEXT