ஸ்டீவன் ஹாக்கிங்கை இயற்பியலாளராகவும், தேர்ந்த விஞ்ஞானியாகவும் நாம் அறிந்திருப்போம். ஆனால் தந்தையாக ஸ்டீவன் மிகவும் வித்தாயசமானவர் என்றே அவரை அறிமுகப்படுத்துகிறார் அவரது மூத்த மகளான லூசி ஹாக்கிங்...
ஸ்டீவனுக்கு 21 வயது இருக்கும்போது ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரைத் தாக்குகிறது மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் ஸ்டீவன் இழக்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டீவன் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். ஆனால் மருத்துவர்களின் கணக்கை பொய்த்து தனது 76 வயது வரை இந்த உலகை கருங்குழி, அண்டம், காலம் என ஸ்டீவன் கட்டிப் போட்டிருந்தார்.
வெறும் விஞ்ஞானியாக மட்டுமல்ல. ஸ்டீவன் கணவனாகவும், தந்தையாகவும் தனக்கான அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
ஸ்டீவனின் காதலியும், அவரது முதல் மனைவியுமான ஜென்னை, தனது கல்லூரி காலத்தில் அவர் சந்திக்கிறார். முதல் காதல் உறுதியுடன் திருமணத்தில் முடிகிறது. ஸ்டீவனின் திருமண வாழ்க்கை நீரோட்டத்தை போல முன்னோக்கிப் போய் கொண்டிருந்தது.
ஆனால் மறுபக்கம் நோயின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டீவனின் உடலியக்கத்தை செயலிழக்கச் செய்தது. இந்நிலையிலும் தனது இயற்பியல் ஆராய்ச்சிகளை ஸ்டீவன் விடாமல் தொடர்ந்தார். அவரது கழுத்துக்கு கீழ் இருந்த உடல் பகுதிகள் முழுமையாக செயல் இழக்க ஸ்டீவன் இயந்திர சக்கர நாற்காலியில் தள்ளப்பட்டார்..
ஆனால் ஸ்டீவன் அறிவியல் தேடல்களிலிருந்தும் தனது குடும்ப பொறுப்புகளிலிருந்துதும் பின்வாங்கவில்லை. அந்த சக்கர நற்காலியில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை எப்படி சுழன்று கொண்டிருந்தாரோ அவ்வாறே பூங்காக்களில் ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்த தனது முன்று குழந்தைகளுடன் நாற்காலியில் உட்கார்ந்தபடியே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார் ஸ்டீவன்.
லூசி , ராபர்ட் , திமோதி ,,, ஸ்டீவன் - ஜென் இணைக்கு பிறந்த மூன்று குழந்தைகள். இதில் லூசி தனது தந்தையின் இறுதி நாள் வரை அவருடன் நெருக்கமாக பயணித்தவர்.
”என் தந்தை அனைவரிடமிருந்து வித்தியாசப்பட்டு இருந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்த ஒருவர் எப்படி குழந்தைகளைப் பார்க்க முடியும் என்று எப்போது என் தந்தையை அனைவரும் நோட்டமிட்டு கொண்டிருப்பர்... என் தந்தையிடம் பிடிவாதமும் , விடா முயற்சியும் அவர் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. என்னிடம் போர் பகுதியில் வாழும் மக்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அவர்களது அழைப்பு உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
உங்கள் தந்தைதான் எங்களின் ஊக்கம் என்று கூறுவார்கள்... எதிர்காலத்தின் மீது பிடிப்பு இல்லாத மக்களுக்கு என் தந்தை நம்பிக்கை அளித்திருக்கிறார். அவர்களுக்கு மட்டுமல்ல.. இந்த உலகுக்கு அத்தகைய பாடத்தைத்தான் என் தந்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
என் தந்தையிடம் அனைத்து கேள்விக்கும் பதில் இருந்தது. ஒரு முறை எனது மகனின் பிறந்தநாள் விழாவில் அவனது நண்பன் ஒருவன், என் தந்தையிடம், “ நான் கருங்குழியில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்” என்று கேட்டான். அங்கு கூடியிருந்த அனைவரும் என் தந்தையின் பதிலுக்காக காத்திருந்தனர். அதற்கு என் தந்தை அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் நீ சுருள்வடிவ பாஸ்தாவாக மாறிவிடுவாய் என்று பதிலளித்தார். அவர்களுக்கு அவரின் பதில் புரிந்தது. ” என லூசி நேர்காணல் ஒன்றில் நினைவுகூறுகிறார்.
ஸ்டீவனின் குடும்ப வாழ்க்கையில் மெல்ல விலகல் ஏற்படத் தொடங்கியது. ஆதர்ச இணையாக ஊடகங்களால் அடையாளம் காணப்பட்ட ஸ்டீவன் - ஜென் இணை பிரிந்தது. காரணம் மிக யதார்த்தமான ஒன்று ஜென்னுக்கு ஸ்டீவனை பராமரிக்கும் பணியிலிருந்து சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதற்கு அவர் பிரிவை தேர்ந்தெடுத்தார். உண்மையில் ஸ்டீவன் இதனை வரவேற்றார். உடல்நிலை சரியில்லாத கணவனை மனைவி விட்டுவிட்டு சென்றுவிட்டாள் என ஸ்டீவன் எந்தப் புரளியையும் சமூகத்தில் ஏற்படுத்தத் தயாராக இல்லை, மாறாக ஜென் அவரை விட்டு விலகுவதற்கான அனைத்து உரிமையையும் ஸ்டீவன் வழங்கினார். அவர்களது பிரிவும் காதலைப் போல் சுதந்திரமாவே இருந்தது.
ஜென் - தனது நண்பரான ஜோனந்தன் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் ஸ்டீவன் - ஜென் நலம் விரும்பும் உறவுகளாக இருந்தனர். ஜென், ஸ்டீவனை விட்டுப் பிரிந்தாலும் அவரது ஆராய்ச்சிகளுக்கும், அவரது புத்தகங்கள் வெளியிடுவதற்கும் உறுதுணையாக இருந்தார்.
முக்கியமாக இந்த இணையின் பிரிவு அவர்களது குழந்தையின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் பார்த்து கொண்டனர். ஸ்டீபன் குறிப்பாக குழந்தைகளின் கல்வியிலும், பொருளாதார உதவிகளிலும் உறுதுணையாக இருந்தார்.
இக்காலக்கட்டத்தில்தான் ஸ்டீவன் - தன்னை கவனித்த கொண்ட செவிலியரான, எலைன் மேசனை 1995 ஆம் அண்டு திருமணம் செய்தார். இந்த மணமும் 2007 ஆம் ஆண்டு முறிவை சந்தித்தது. ஆனால் ஸ்டீவன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
‘இறைவன் உலகைப் படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை, இங்கு சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை என்று அறிவியல் அடிப்படையில் தனது கருத்தை உலகிற்கு துணிவுடன் அறிவித்த ஸ்டீவன் ஹாக்கிங் தந்தையாகவும், துணையாகவும் பயணித்த காலம் அழகானது. அனைவரும் தெரிந்துக் கொள்ள கூடியதும்கூட..!
இன்று - ஜூன் 18, 2023 - தந்தையர் தினம்
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in