மதுரை: ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்..' என்பது பழமொழி. அதன்படி, திருவாசகம் மூலம் மக்களை மனமுருகச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மதுரையைச் சேர்ந்த மாணவி எஸ்.எஸ்.யாழினி.
மதுரை பொன்மேனி மங்களம் நகரைச் சேர்ந்த சுரேஷ்-அன்புமாரி ஆகியோரது மகள் எஸ்.எஸ்.யாழினி (14). சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவர் கோயில்கள், திருவிழாக்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களில் திருவாசகம் முற்றோதல் செய்து பக்தர்களை மனமுருகச் செய்து ஆன்மிக கருத்துகளை பரப்பி வருகிறார்.
மேலும் திருவாசகத்திலுள்ள 51 பதிகங்கள், 658 பாடல்களை 3 மணி நேரம் 47 நிமிடத்தில் பதிகம் பாடி சாதனை செய்துள்ளார். இவரது சாதனையை இண்டியா புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்து சான்றிதழ், விருது வழங்கி உள்ளது.
இதுகுறித்து சிறுமி எஸ்.எஸ்.யாழினி கூறியதாவது:
எனது பெற்றோர் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்துச் செல்வர். 5 வயதில் இருந்து திருவாசகம் கற்க ஆரம்பித்தேன். சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது அருளாளர் மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருவாசகம். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. மாணிக்கவாசகர் பாடிய பாடல் வரிகள் படிப்பதற்கு எளிமையாகவும், எளிதில் அர்த்தம் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கும். திருநகர் திருமுறை மன்றத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். திருக்கழுக்குன்றம் தாமோதரனின் திருவாசக உரைகளை அடிக்கடி கேட்டு மனனம் செய்வேன். திருவாசகம், திருமுறை களை ஓதுவார்களிடம் கற்றுக்கொண்டு பயிற்சி பெற்றேன்.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நடந்த திருவாசகம் முற்றோதல் போட்டியில் பங்கேற்று (2-ம் வகுப்பு படிக்கும்போது) முதல் பரிசு பெற்றேன். ஆன்மிகத்தில் சொற்பொழிவாற்றி சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன்படி திருவாசகத்திலுள்ள 51 பதிகம், 658 பாடல்களை 3 மணி நேரம் 47 நிமிடங்களில் பாடி சாதனை செய்தேன்.
மாவட்டந்தோறும் சென்று ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்று சொற்பொழிவாற்றி வருகிறேன். உலக சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பு சார்பில், திருவாசக இசையரசி பட்டமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டுகளும், விருதுகளும் பெற்றுள்ளேன்.
63 நாயன்மார்களின் வரலாறு, 12 திருமுறை களை ராகங்களில் பாடவேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.