செங்கோலில் நந்தி சிலை 
வாழ்வியல்

மதுரை | பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க நாட்டு மாட்டுச் சாணத்தில் 6 அடி உயர செங்கோல்

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்து தமிழர்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாட்டு மாட்டுச் சாணத்தில் 6 அடி உயர செங்கோலை உருவாக்கி உள்ளார் உசிலம்பட்டியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் கணேசன்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருங்காம நல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன் (53). இயற்கை விவசாயியான இவர் நாட்டு மாட்டுச் சாணம், கோமியம் கலந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை கை வேலைப்பாடாகவே உருவாக்கி வருகிறார்.

கலைஞர் கணேசன்

இதில் நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து மாவிலை தோரணங்கள், பூஜை பொருட்கள், விநாயகர், சரஸ்வதி, இயேசு கடவுள் சிலைகள், பாசி மாலைகள், நிறுவனங்களின் இலச்சினை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

தற்போது, புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்து தமிழர்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பசு மாட்டு சாணத்தில் 6 அடி உயரத்தில் செங்கோல் செய்துள்ளார். இது குறித்து விவசாயி பா.கணேசன் கூறுகையில், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்து பிரதமர் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதன் நினைவாக செங்கோல் செய்துள்ளேன். 3 கிலோ நாட்டு பசுமாட்டு சாணம் மற்றும் 1 லிட்டர் கோமியம் மட்டும் பயன்படுத்தி 24 பகுதிகளாக பிரித்து 6 அடி உயரத்துக்கு செங்கோல் உருவாக்கி உள்ளேன். இதனை 3 நாட்களில் செய்து முடித்தேன். பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT