விருதுநகர்: வறண்ட பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இயற்கை முறையில் செழித்து வளரும் டிராகன் உள்ளிட்ட பழங்களை விளைவித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறார் பட்டதாரி இளைஞர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள விடத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் (36). சென்னையில் பி.காம். பட்டம் படித்த இவர், ஸ்பெயினில் எம்.பி.ஏ. பட்டம் முடித்துள்ளார். அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுவதை விரும்பாத அமர்நாத், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இயற்கை விவசாயத்தை நோக்கி தனது தேடலை தொடங்கினார். இதற்காக, தனக்குச் சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலத்தை சீர்படுத்தி சமன்படுத்தினார்.
வறண்ட பூமியாக இருந்தபோதும், சொட்டு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தி பல செடிகளை நட்டு வைத்தார். தற்போது, இவர் விளைவிக்கும் டிராகன் பழங்கள் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டிராகன் பழத்துடன், பல அரியவகை பழங்களையும் சாகுபடி செய்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: பட்டம் முடித்த பின்பு அலுவலகம் சென்று பணியாற்றுவதில் எனக்கு விருப்பம் இல்லை. புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், பல ஊர்களுக்கும் சென்று அரிய புகைப்படங்களை எடுத்து வந்தேன். அப்போது, எனது தேடல் இயற்கை விவசாயத்தின் மீது திரும்பியது. எங்கிருந்து தொடங்குவது, எதை தொடங்குவது என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது, நாம் இருக்கும் இடத்திலேயே இயற்கை விவசாயத்தை தொடங்கினால் என்ன என்ற எண்ணம் உதித்தது.
அதையடுத்து, சொந்த ஊரில் உள்ள நிலத்தை அதற்காக தயார் செய்தேன். பல்வேறு பழ மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்தேன். கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை சுமார் 35 ஏக்கரில் ஏராளமான பழ மரக்கன்றுகளை நட்டு வைத்து, இயற்கை முறையில் விவசாயம் செய்து அறுவடையும் செய்து வருகிறேன்.
குறிப்பாக, டிராகன் பழம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சென்னை மற்றும் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, மாலத்தீவுக்கும் டிராகன் பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது, லண்டனில் இருந்தும் ஆர்டர் கிடைத்துள்ளது. விரைவில் லண்டனுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளேன். டிராகன் பழம் ஒரு கிலோ மொத்த விலைக்கு ரூ.160-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.280-க்கும் விற்பனை செய்கிறோம்.
இது தவிர, அத்திப்பழம், பேரீச்சை, சீதாப்பழம், மா, கொய்யா, நாவல், கொடிக்காய் உள்ளிட்ட பலவகையான பழங்களையும் பயிர் செய்துள்ளேன். தற்போது டிராகன் பழம் அறுவடை காலம் என்பதால், ஒரு மாதம் வரை அறுவடை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.