கு.கணேசன் | கோப்புப் படம் 
வாழ்வியல்

விரல் நுனியில் சினிமா தகவல்களைப் பகிரும் மதுரையின் திரைக்காதலன்!

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: அரசு பணியலிருந்து ஓய்வுபெற்றாலும் திரைப் படங்கள் குறித்து ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வருகிறார் ஓய்வு பெற்ற மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர் கு.கணேசன் (70).

கடந்த நூற்றாண்டில் திரைப்படங்கள் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் திரைப் படங்கள், நாடகங்கள் மூலம் மக்களி டையே சுதந்திரதாகம் விதைக்கப்பட்டு வளர்த் தெடுக்கப்பட்டது. சில வரலாற்று நாயகர்களும் சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

நாடகங்கள் மூலம் பகுத்தறிவுக்கு வித்திட்ட அண்ணா தமிழக முதல்வர் ஆனார். அவரது வழியில், சினிமாவில் புரட்சிக் கருத்துகள் பேசிய எம்ஜிஆர், பகுத்தறிவு வசனம் எழுதிய கருணாநிதி ஆகியோர் முதல்வர் ஆகினர். திரைவானில் நடிகையாக ஜொலித்த ஜெயல லிதாவும் முதல்வர் ஆனார்.

தமிழக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த திரைப்படங்கள் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்துள்ள கு.கணேசன், மாவட்ட மறுவாழ்வு நல அலுவலராக ஓய்வு பெற்ற பின்னர் ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை மாவட்டம், சோழவந்தான் சொந்த ஊர். 1964-ல் மதுரை வந்தேன். மதுரை கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து, 1976-ல் அரசு வேலையில் சேர்ந்தேன். எம்.ஃபில் படிப்பை வேலைக்கு விடுமுறை விட்டு நிறைவு செய்தேன். 2002-ல் சிவகங்கையில் மாவட்ட மறுவாழ்வு அலுவலராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். அக்காலத்தில் எங்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் என்றால் சினிமாதான்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் மூலம் சினிமா பற்றி அறிந்து கொள்வேன். சினிமா பற்றிய ஆர்வம் பற்றிக் கொள்ள அனைத்து தகவல்களையும் திரட்ட ஆரம்பித்தேன். மதுரையின் முதல் திரை யரங்கம், ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம், நடிகர், நடிகைகள், படம் எப்போது வெளியானது, எவ்வளவு வசூல், யார் இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைத்து தரவுகளை யும் சேகரித்துள்ளேன்.

சென்ட்ரல் திரையரங்கில் 1732 இருக்கைகள், தங்கம் திரையரங்கில் 2576 இருக்கைகள், 1.44 ஏக்கர் பரப்பளவில் 100 கார், ஆயிரம் சைக்கிள்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய திரையரங்கம். அப்போது திரைப்படம் வெளியாகும் முன்பே பாட்டுப் புத்தகங்கள் வெளியாகும். 1940-ல் இருந்து 1980-ம் ஆண்டு வரையிலான திரைப்பட பாட்டுப் புத்தகங்களை சேகரித்துள்ளேன்.

சினிமா படங்களின் அகர வரிசையில் 650 படங்களுக்கு மேல் தொகுத் துள்ளேன். இதுவரை சுமார் 10 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். முதலில் இறைவனுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் உன் அருளே விந்தை, உன் படைப்பே விந்தை என்ற நூலை வெளியிட்டேன். எம்ஜிஆர் நடித்த படங்களை தொகுத்து கற்பகத்தரு நிழலில் என்ற தலைப்பில் எழுதினேன்.

பின்னர் இளைஞர்களுக்காக ‘காதல் களத்தில் வெல்பவர்களுக்கு, சிறுவர்களுக்கான ஹேப்பி சில்ரன் லேன் (குழந்தை களின் மகிழ்ச்சியான பாதை) என்ற நூலை கவிதை வடிவில் எதுகை மோனையுடன் எழுதினேன். அந்தாதி பாடல் வடிவில் ஆதியும் அந்தமும் இல்லாத சிவனாரே என்ற நூலும், குழந்தைப்பருவ நினைவலைகள் என்ற நூலும் எழுதியுள்ளேன்.

ரசனையின் தலைநகரம் மதுரை, சரித்திரம் படைத்த சாதனை திலகங்கள், சினிமா ரசிகனின் நெஞ்சில் நிறைந்த 100 திரைத்துளிகள், எழிலரசர் எம்ஜிஆரின் இனியவை நாற்பது என 10 நூல்கள் எழுதியுள்ளேன். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஆய்வுப் பணிக்கு என்றும் ஓய்வில்லை என்கிறார் இந்த திரைக்காதலன்.

SCROLL FOR NEXT