மான்செஸ்டர்: வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கள்கிழமைகளில்தான் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக பெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் அயர்லாந்தின் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று, 2013 மற்றும் 2018-க்கு இடையில் அயர்லாந்து முழுவதும் தீவிர மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10,528 இருதய நோயாளிகளின் தரவுகளை ஆய்வு செய்தனர். இந்த வகை மாரடைப்பு STEMI என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெரிய கரோனரி தமனி முற்றிலும் அடைக்கப்படும்போது ஏற்படுகிறது.
இந்த ஆய்வில் வாரத்தின் தொடக்கத்தில் குறிப்பாக திங்கள்கிழமைகளில் STEMI மாரடைப்பு விகிதங்கள் அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் எதிர்பார்த்ததை விட STEMI விகிதங்கள் அதிகமாக இருந்தன. இந்த ஆய்வறிக்கையை மான்செஸ்டரில் நடைபெற்ற பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டி (BCS) மாநாட்டில் மருத்துவர்கள் சமர்ப்பித்தனர்.
இந்த ‘திங்கள் மாரடைப்பு’ ஏற்படுவதற்கான காரணத்தை ஆய்வாளர்களால் இதுவரை முழுமையாக கண்டறிய முடியவில்லை. இதற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் ‘சர்க்காடியன் ரிதம்’ எனப்படும் உடலின் இயக்கவியல் சுழற்சியுடன் இந்த திங்கள்கிழமை மாரடைப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் STEMI வகை மாரடைப்பு காரணமாக 30,000-க்கு அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மாரடைப்புக்கு பொதுவாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்படுகிறது. இது அடைக்கப்பட்ட கரோனரி தமனியை மீண்டும் திறக்கும் சிகிச்சை ஆகும்.
பெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட்டின் தலைமை மருத்துவரும் இருதயநோய் நிபுணருமான டாக்டர் ஜாக் லஃபன் கூறும்போது, "வாரத்தின் தொடக்கத்திற்கும் STEMI மாரடைப்புக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், முந்தைய ஆய்வுகளில் இருந்து நாங்கள் அறிந்தவற்றின் அடிப்படையில், இதை ஒரு சர்க்காடியன் சுழற்சி தொடர்பான விஷயமாக கருதுவது நியாயமானது" என்றார்.
பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் (BHF) இயக்குநர் பேராசிரியர் சர் நிலேஷ் சமானி கூறும்போது, "இங்கிலாந்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நபர் தீவிர மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். எனவே, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது என்று தொடர்ந்து ஆய்வு செய்வது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.