கோவை: கோவை மாநகரில் உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, மூலிகை பூங்கா, மூத்த குடிமக்கள் பூங்கா, சிறுவர் பூங்கா என பல வகை பூங்காக்கள் உள்ளன.
இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டு அறிவியல் ரீதியான கருத்துகளை பூங்காவுக்கு வரும் மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், 68-வது வார்டுக்குட்பட்ட சிவானந்தா காலனி டாக்டர் அழகப்பா சாலையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்துக்கு அருகே அறிவியல் பூங்கா புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-11-ம் ஆண்டுகளில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், அரை ஏக்கர் பரப்பளவில் இந்த அறிவியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. பின்னர், முறையாக பராமரிப்பு இல்லாததால் முடங்கியது. தற்போது, மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் 8-ம் தேதி அறிவியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவுக்கு வரும் சிறுவர்கள், சிறுமிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அறிவியல் சார்ந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது: இந்த அறிவியல் பூங்காவில் முன்பு 19 விளையாட்டு உபகரணங்கள் இருந்தன. தற்போது 20 உபகரணங்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு, மொத்தம் 39 அறிவியல் சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவுக்குள் நுழைந்தவுடன் அறிவியல் ஆராய்ச்சியாளரும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல்கலாமின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்றுத் திசைக்காட்டி கருவி, மணி கோபுரம், காற்று வேக அளவி, ஈரமானி, மழை மானி, ஊஞ்சல், பரவளையத்தை கடக்கும் நேர் தண்டு, ஆட்டோ மொபைல் மாதிரி, நியூட்டனின் மூன்றாம் விதி, ஒளியின் திசை வேகம், மைய விலக்கு விசை, பிரம்மாஸ் கோபுரம், பலவகை கண்ணாடிகள், தனிம அட்டவணை, அலை இயக்கம், பரவளையம், ஆற்றல் கடத்தும் வழிகள், சூரிய மண்டலம், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரி உள்ளிட்ட 39 வகையான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த உபகரணங்கள் அருகிலேயே, அந்த உபகரணங்கள் எவ்வாறு இயங்கும், அதன் பயன் என்ன? என்பன போன்ற விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் இப்பூங்காவுக்கு அனுமதி இலவசம்.
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் சுழற்சி முறையில் மாணவ,மாணவிகள் இப்பூங்காவை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தவிர, இப்பூங்காவில் உள்ள உபகரணங்கள் குறித்து விளக்க மாநகராட்சி மூலம் தகுந்த நபர்கள் நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது பூங்கா முழுப் பயன்பாட்டில் உள்ளது. கதவு பொருத்தும் பணி மட்டும் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.