திருச்சி: திருச்சிக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்றனர்.
உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் இன்று (ஜூன்12) கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியது.
கரோனா ஊரடங்கு காலக்கட்டத்துக்குப் பிறகு குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாமஸ் கூறியது: திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரைக் காட்டிலும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காய்கறிக் கடை, இறைச்சிக் கடை, பேனர் மற்றும் சாமியானா பந்தல் அமைத்தல், கட்டிட வேலை போன்ற பல்வேறு பணிகளில் சிறார்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாநகரிலும் வாகன பழுது பார்க்கும் கடைகள் மற்றும் உணவகங்களில் சிறார்கள் பணியில் இருப்பதைக் காண முடிகிறது. இதேபோல, கட்டிட வேலை மற்றும் இரும்பு தொழிற்சாலைகளில் வடமாநில சிறார்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இது தொடர்பாக, திருச்சி மாவட்ட குழந் தைகள் நலக் குழுத் தலைவர் மோகன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு மீட்கப்படும் குழந்தை களிடம் விசாரணை நடத்தியதில், பெரும்பாலான குழந்தைகள் வேலைக்கு வருவதற்கு பொருளா தார நெருக்கடியே காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த சிறார்கள் பிற மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வேலை தேடி வருகின்றனர். அவர்களை பெற்றோரே அழைத்து வருவதை பேருந்து நிலையங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது.
அண்மைகாலமாக, ஹவுரா உள்ளிட்ட வடமாநில ரயில்களில் வரும் வடமாநில குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 15 சிறுமிகள் உட்பட 500 பேர் மீட்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது போன்று, மீட்கப்படும் சிறார்கள் வடமாநிலத்தவர் என்றால், மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு, கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, அவர்களின் பொருளாதார நெருக்கடியே காரணமாக இருக்கும் நிலையில், அதிலிருந்து சிறார்களை மீட்டு, கல்வியை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இன்று - உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்